குடியுரிமை திருத்த சட்டம்: திமுகவுடன் கைகோர்க்கும் கமல்!!!

சென்னை, டிசம்பர்-19

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான திமுக நடத்தும் பேரணியில் பங்கேற்க கமல்ஹாசனை நேரில் சென்று திமுக அழைத்தது.

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாடெங்கும் கிளர்ச்சி வெடித்து வரும் நிலையில் தமிழகத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் கடுமையாக எதிர்த்துப் போராட்டம் நடத்தி வருகின்றன.

கமலும் கடுமையாக இச்சட்டத்தைக் கண்டித்து வருகிறார். திமுக நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் நீங்கள் கலந்துகொள்வீர்களா? என கமலிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ”அழைத்தால் செல்வோம், அழையா விருந்தாளியாக எந்நாளும் செல்லமாட்டோம்” என்று தெரிவித்திருந்தார்.

ஆனாலும், கமலை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு திமுக அழைக்கவில்லை. இந்நிலையில் திமுக நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் டிச.23 அன்று பேரணி நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து பேரணியில் கலந்துகொள்ள கமலுக்கும் அழைப்பு விடுப்பது என திமுக முடிவெடுத்தது.

மக்கள் நீதி மய்யத்தைப் பேரணியில் கலந்துகொள்ள அழைப்பதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பூச்சி முருகன் இருவரும் கமல்ஹாசனை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். கமல் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்.

இதுகுறித்து மக்கள் நீதிமய்யம் விடுத்துள்ள அறிவிப்பு: “வருகின்ற டிசம்பர் 23-ம் தேதியன்று திமுக அதன் தோழமைக் கட்சிகளோடு இணைந்து நடத்தவிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி கலந்துகொள்ள வேண்டி திமுகவின் அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதியும், பூச்சி முருகனும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனைக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். அப்பொழுது மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து பொதுச் செயலாளர்களும் நிர்வாகிகளும் உடனிருந்தனர்”. இவ்வாறு மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *