உள்ளாட்சி நிலுவை தொகையை விடுவிக்க மத்திய அரசிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை!!!

டெல்லி, டிசம்பர்-19

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கவேண்டிய நிலுவை தொகையை விரைவில் ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை நேரில் சந்தித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை மனு அளித்தார்.

டெல்லியில் இன்று மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை சந்தித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சி அமைப்புக்கு ரூ.876.93 கோடி நிதியை விடுவித்தமைக்கு நன்றி தெரிவித்தார். மேலும், 14-வது மத்திய நிதி ஆணையத்தின் மூலம் தமிழகத்திற்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையை விரைவில் விடுவிக்க வேண்டும் என்று அமைச்சர் வேலுமணி கோரிக்கை விடுத்தார்.

2017-2018 ஆம் ஆண்டிற்கான செயலாக்க மானிய தொகை ரூ.194.78 கோடி மற்றும் 2018-2019 ஆண்டிற்கான செயலாக்க மானிய தொகை ரூ.221.20 கோடி நிதியை தமிழகத்திற்கு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், 2019-20 ஆண்டிற்கான அடிப்படை மானிய தொகை ரூ.2,369.86 கோடி நிதியையும் உள்ளாட்சி அமைப்புக்கு ஒதுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக 27 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி அமைப்புகளுக்கு வரும் 27, 30 தேதிகளில் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, உள்ளாட்சி பிரதிநிதிகள் ஜனவரி 6-ம் தேதி பதவியேற்கவுள்ளனர்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால், ஊராட்சி பகுதிகளில் உள்ள குடிமக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், கிராமப்புறங்களில் வளர்ச்சியை ஏற்படுத்தவும் 14-வது மத்திய நிதி ஆணையத்தின் மூலம் தமிழகத்திற்கு வழங்கப்படும் நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *