குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம்: டெல்லியில் இணையதள சேவை துண்டிப்பு

சென்னை, டிசம்பர்-19

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டம் வலுத்து வருவதால், டெல்லியில் சில பகுதிகளில் செல்போன் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் போராடி வருகின்றனர். இந்நிலையில் டெல்லியின் சில இடங்களில் செல்போன் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

இணையதள சேவை மட்டுமின்றி, எஸ்எம்எஸ், குரல் அழைப்புகள் போன்ற அனைத்து வகையான தொலைபேசி வசதிகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க இவ்வாறு தற்காலிகமாக சேவையை நிறுத்தி வைத்துள்ள உள்ளதாக ஏர்டெல் அறிவித்துள்ளது. இதேபோல் ஐடியா, வோடபோன் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

வோடபோன் வெளியிட்ட அறிவிப்பில், அரசு உத்தரவால்தான் தற்காலிகமாக சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மறு உத்தரவு வந்ததும் சேவை திருப்பி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் செங்கோட்டை பகுதியில் தொடர்ந்து போராட்டக்காரர்கள் குவிந்து வருவதால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. செங்கோட்டை உள்ளிட்ட வேறு சில பதட்டமான பகுதிகளில் செல்போன் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லி செங்கோட்டை பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பல மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டது. இந்த நிலையில், தற்போது செல்போன் சேவையும் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *