யார் தமிழின துரோகி?-வரலாற்றை படியுங்கள் ஸ்டாலின் – அன்புமணி ஆவேசம்

சென்னை, டிசம்பர்-19

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்று குடியரசு தலைவர் ஒப்புதலுடன் சட்டமாக்கப்பட்டது.  

“மசோதாவை ஆதரித்து வாக்களித்ததன் மூலம், ஈழத்தமிழர்களுக்கு பாமகவும் துரோகம் இழைத்துவிட்டது” என, காஞ்சிபுரத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார். அவரது இந்த குற்றச்சாட்டு பதிலடி தரும் விதத்தில், அன்புமணி ராமதாஸ், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

10 நிமிடங்கள் இருக்கும் அந்த வீடியோவில், ஈழத்தமிழர்களுக்கு திமுக தான் துரோகம் இழைத்துள்ளது என்ற தமது குற்றச்சாட்டை நியாயப்படுத்தும் விதத்தில், ஈழதமிழர்களுக்கு திமுக இழைத்துள்ள துரோகங்கள் என பட்டியலிட்டு அன்புமணி பேசியுள்ளார்.

அவரது உரையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
ஈழத்தமிழர்கள் தனிநாடு கேட்டு போராட ஆரம்பித்த பிறகு, தமிழகத்தில் 12 ஆண்டுகளும், மத்தியில் 18 ஆண்டுகள் கூட்டணியில் அங்கம் வகித்தும் வந்த கட்சி திமுக. அப்போதெல்லாம் தனிஈழம் மலர்வதற்காக திமுக ஒன்றும் செய்யவில்லை.

2009 இல், இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது, மத்தியில் ஆட்சிபுரிந்து வந்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியிலிருந்து பாமக வெளியேறியது. ஆனால், அப்போது கூட கூட்டணியிலிருந்து திமுக வெளியேறவில்லை.

வேலூரில் உள்ள அகதிகள் முகாமில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி, அதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்தது அப்போதைய திமுக அரசு.

இலங்கை தமிழர்கள் 1.5 லட்சம் பேரை கொன்று குவித்த, அந்நாட்டின் முன்னாள் அதிபர் ராஜபக்ச அளித்த விருந்தில், கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் பங்கேற்றதுடன், அவர் கொடுத்த நினைவு பரிசையும் வாங்கி வந்ததை மறந்துவிட முடியுமா என்ன?

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, சிகிச்சைக்காக தமிழகம் வந்த, பிரபாகரனின் தாயாரை விமானத்தில் இருந்தபடியே திருப்பி அனுப்பியது கருணாநிதி தலைமையிலான திமுக அரசு. இப்படி, ஈழத்தமிழர்களுக்காக திமுக செய்ததெல்லாம் துரோகம்… துரோகம்…துரோகம் மட்டுமே. இதனை, தற்போது திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் வைகோவே ஒப்புக் கொள்வார்.

மாறாக, இலங்கை தமிழர்களுக்காக பல போராட்டங்களை நடத்தியதுடன், அவர்களின் உரிமைக்காக 50 முறைக்கும் மேல், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் பாமக தொடர்ந்து குரல் கொடுத்துள்ளது.

இந்த வரலாறு எல்லாம் தெரியாமல், யாரோ எழுதிக் கொடுப்பதை ஸ்டாலின் மேடைகளில் பேசிக் கொண்டிருக்கிறார். ஈழதமிழர்கள் குறித்த வரலாற்றை முதலில் வைகோ போன்றவர்களிடம் கேட்டு அவர் தெரிந்துக் கொள்ளட்டும்.

அதன் பிறகு, இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தது யார் என்பதை விவாதிக்கலாம். இந்த விவகாரம் குறித்து நேர் நேருக்கு விவாதிக்க நான் தயார்! நீங்கள் தயாரா ஸ்டாலின்? என அன்புமணி ராமதாஸ் சவால் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *