உள்ளாட்சியில் நல்லாட்சி: ஒரே நாளில் 13 தேசிய விருதுகளை பெற்றார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!!!

டெல்லி, டிசம்பர்-19

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக மத்திய அரசின் 2019-ம் ஆண்டிற்கான 13 தேசிய விருதுகளை மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடமிருந்து தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெற்றுக்கொண்டார்.

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தினை தேசிய அளவில் சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களுக்கு விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இதில், தமிழகத்துக்கு மொத்தம் 13 தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுகளை மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடமிருந்து தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெற்றுக்கொண்டார்.

மாநில, மாவட்ட, ஊராட்சி ஒன்றிய, கிராம ஊராட்சி அளவில் 8 தேசிய விருதுகளும், மாநில ஊரக வளர்ச்சி மற்றும் கிராம ஊராட்சியின் சிறப்பான செயல்பாட்டிற்காக ஒரு தேசிய விருதும், ரூர்பன் திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்காக இரண்டு தேசிய விருதுகளும், தீனதயாள் உபாயத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்திற்கு ஒரு தேசிய தங்க விருது என ஆகமொத்தம் 13 விருதுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.

பணிகளை விரைந்து முடித்தல், இயற்கை வளம் மற்றும் நீர் வள மேலாண்மை பணிகளை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக தமிழகத்திற்கு முதலிடம் என மாநில அளவில் 2 தேசிய விருதுகளும்

மாவட்ட அளவில், MGNREGS திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியதற்காகவும், சிறந்த நீர் தேக்கி வைக்கும் கட்டமைப்புகளை உருவாக்கியதற்காகவும் வேலூர் மாவட்டத்திற்கு மாவட்ட அளவிலான 2 தேசிய விருதுகளும்,

தொழிலாளர்களுக்கு குறித்த காலத்திற்குள் ஊதியம் வழங்கியதில் சிறப்பான செயற்பாட்டிற்காக திருச்சிக்கு மாவட்ட அளவிலான தேசிய விருதும், பணிகளை முடித்ததில் சிறந்த செயல்பாட்டிற்காக கரூர் மாவட்டத்திற்கு 2-ம் இடத்திற்கான மாவட்ட அளவிலான விருது என மொத்தம் நான்கு மாவட்ட அளவிலான தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.

குறித்த காலத்திற்குள் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குதலில் சிறப்பான செயற்பாட்டிற்காக, காஞ்சிபுரம் மாவட்டம் – புனித தோமையர் மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு முதலிடத்திற்கான ஊராட்சி ஒன்றிய தேசிய விருதும், ஊராட்சி அளவில் MGNREGS திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திய வகையில், சிவகங்கை மாவட்டம்- தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செலுகை கிராம ஊராட்சிக்கு கிராம ஊராட்சி அளவிலான தேசிய விருதும் வழங்கப்பட்டது.

அதே போல, மறைமலைநகரில் செயல்பட்டு வரும், மாநில ஊரக வளர்ச்சி மற்றும் கிராம ஊராட்சி நிறுவனத்தின் சிறப்பான செயல்பாட்டிற்காக சிறந்த மாநில ஊரக வளர்ச்சி நிறுவனத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டது.

ரூர்பன் திட்டத்தின் கீழ், ஒட்டுமொத்த செயல்பாட்டிற்காக (2வது இடம்) மற்றும் தொகுப்புகளுக்கான இடம் சார்ந்த திட்டமிடலில் (3வது இடம்) சிறப்பாக செயல்பட்டமைக்காக 2 தேசிய விருதுகளும், தீனதயாள் உபாயத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா (DDU– GKY) திட்டத்தின், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தமைக்காக தமிழகத்திற்கு தேசிய தங்க விருதும் வழங்கப்பட்டுள்ளது,

சிறப்பான செயல்பாட்டிற்காக மொத்தம் 13 தேசிய விருதுகளை மத்திய அரசு வழங்கி தமிழகத்திற்கும், தமிழக உள்ளாட்சித்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளது

இதை தவிர, நடப்பாண்டில் தமிழக உள்ளாட்சித்துறை ஏற்கனவே 19 தேசிய விருதுகளை பெற்றுள்ளது. இன்று வழங்கப்பட்ட 13 விருதுகளையும் சேர்த்து, தமிழக ஊரக வளர்ச்சித் துறை நடப்பாண்டில் மட்டும் 31  தேசிய விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமில்லாது, 2012 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக 99 தேசிய விருதுகளை தமிழகம் வென்றுள்ளது.

2012-ம் ஆண்டு முதல் தேசிய அளவில், ஊரக வளர்ச்சி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக, மாநில அளவில் 19 தேசிய விருது, மாவட்ட அளவில் 23 தேசிய விருது, ஊராட்சி ஒன்றிய அளவில் 13 தேசிய விருது, கிராம ஊராட்சிகள் அளவில் 44 தேசிய விருது என மொத்தம், 99 தேசிய விருதுகளை மத்திய அரசிடம் இருந்து தமிழக உள்ளாட்சித்துறை வாங்கி குவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *