டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானம் நிறைவேற்றம்!!!

நியூயார்க், டிசம்பர்-19

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிரான கண்டனத் தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது. 

அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல், நாடாளுமன்ற நடவடிக்கையை தடுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் டிரம்ப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பிடன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், அவர் மீது ஊழல் விசாரணையை நடத்த வேண்டும் என்று உக்ரைன் அரசுக்கு டிரம்ப் நெருக்கடி கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனால், பிரதிநிதிகள் சபையில் டிரம்ப் மீதான கண்டனத் தீர்மானத்திற்கு சபாநாயகர் நான்சி பெலோசி அனுமதியளித்தார். இதற்கு கடுமையாக எதிர்வினையாற்றிய டிரம்ப், பதவி நீக்க நடவடிக்கையை கைவிடும்படி கேட்டுக் கொண்டார். அரசியல் சாசனத்திற்கு எதிரான நடவடிக்கை என்றும், ஜனநாயகக் கட்சியினர் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும் சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அதிபர் டிரம்ப்புக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தின் மீது பிரதிநிதிகள் சபையில் விவாதம் நடைபெற்றது. பல மணி நேர விவாதத்திற்கு பின்னர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த தீர்மானத்தை ஆதரித்து 229 எம்பிக்களும், எதிராக 194 எம்பிக்களும் வாக்களித்தனர். இதனால் அந்த தீர்மானம் நிறைவேறியது.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற நடவடிக்கைகளைத் தடுத்தார் என்ற தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதிலும் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதை ஆதரித்து பெரும்பான்மையான உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இதனைத் தொடர்ந்து பேசிய பெலோசி, அரசியல் சட்டப்படி சிறப்பு வாய்ந்த நாளாக இருந்தாலும் அமெரிக்க வரலாற்றில் இதுஒரு வேதனைதரும் நாள் என்று குறிப்பிட்டார். அதிபருக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்படுவது அமெரிக்க வரலாற்றில் இது மூன்றாவது முறையாகும்.

டிரம்ப் பதவிநீக்கம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து அது செனட் சபை விவாதத்திற்கு அனுப்பப்படும். அங்கு டிரம்ப்புக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதால் அவர் பதவிக்கு உடனடியாக சிக்கல் ஏதும் இருக்காது என்று கூறப்படுகிறது.

இதனிடையே, மிச்சிகன் மாகாணத்தில் பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் பேசிய அதிபர் டிரம்ப், தாம் எந்த தவறும் செய்யவில்லை என்றும், தம்மீதான பதவி நீக்க தீர்மானம் முறையற்றது என்றும் தெரிவித்தார். 

குடியரசுக் கட்சியின் அமோகமான ஆதரவு தமக்கு இருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார். தமக்கு எதிராக செயல்பட்ட சபாநாயகர் பெலோசியை வரும் தேர்தலில் தோற்கடிக்கச் செய்யுமாறு ஆதரவாளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *