உள்ளாட்சி தேர்தல்: நகராட்சி பதவிகளுக்கான இடஒதுக்கீடு அறிவிப்பு

சென்னை, டிசம்பர்-18

தமிழகத்தில் நகராட்சிகளுக்கான இடஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 51 நகர்மன்ற தலைவர் பதவியிடங்கள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர 27 மாவட்டங்களுக்கு மேற்கண்ட தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் பேரூராட்சி, மாநகராட்சி மேயர் பதவிக்கான இடஒதுக்கீட்டுக்கான அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் நகராட்சிகளுக்கான இடஒதுக்கீடு விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி 121 நகராட்சிகள் உள்ள தமிழகத்தில் ஆம்பூர், குடியாத்தம், அறந்தாங்கி, தேவகோட்டை, பொள்ளாச்சி, அருப்புக்கோட்டை, செங்கல்பட்டு, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட 51 நகராட்சிகள் பொதுப்பிரிவை சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, கூடலூர் நகராட்சி பழங்குடியின பெண்களுக்காகவும், ராணிப்பேட்டை, சீர்காழி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட 9 நகராட்சிகள் பட்டியலின பெண்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல், நெல்லிக்குப்பம், அரக்கோணம், மறைமலைநகர் உள்ளிட்ட 8 நகராட்சிகள் பட்டியல் இனத்தவர்களுக்காகவும் (பொது) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *