கொசு முட்டைகளை அழிக்க பிரத்யேக கருவிகள்: கோவை மாநகராட்சி டிஜிட்டல் விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை, டிசம்பர்-18

ஸ்மார்ட்டா யோசிப்போம், சிறப்பா செயல்படுவோம் என்ற வாசகத்தை வலியுறுத்தி கோவை மாநகராட்சி தீவிர டிஜிட்டல் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

தமிழகத்தில் இரண்டாவது மிகப்பெரிய மாநகராட்சியான கோவையில் ஸ்மார்ட் சிட்டி மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஏராளமான வளர்ச்சிப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கோவை மாநகராட்சியின் மற்றோரு சீரிய முயற்சியாக, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் டிஜிட்டல் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கொசு ஒழிப்பு, மழைநீர் சேகரித்தல், குப்பைத்தொட்டியில்லாத நகரமாக்குதல், சாலைபாதுகாப்பு, திடக்கழிவு மேலாண்மை, இயற்கை உரம் தயாரித்தல் உள்ளிட்டவைகளில் சிறந்துவிளங்கிட ஸ்மார்ட்டா யோசிப்போம், சிறப்பா செயல்படுவோம் என்ற வாசகத்தோடு டிஜிட்டல் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நீரைத் தேங்க விடாமல் பார்த்துக் கொண்டால் கொசுக்கள் பெருகாமல் தவிர்க்கலாம். அதுமட்டுமில்லாது, அவ்வாறு நீர் தேங்கும் இடத்தில் இருக்கும் கொசு முட்டைகளை அழிக்க மாநகராட்சியிடம் பிரத்யேக கருவிகள் இருப்பதாக டிஜிட்டல் பிரச்சாரம் வாயிலாக கோவை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அந்த கருவி 100 அடி தூரத்தில் இருந்தும் கொசு முட்டைகளை அழிக்கும் திறனுடையது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற மாநகராட்சியின் தூய்மை நடவடிக்கைகளில் பொதுமக்களும் பங்கெடுத்து ஸ்மார்ட்டாக யோசித்து சிறப்பாக செயல்படுத்துவோம் என்று கோவை மாநகராட்சி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கிறது.

தூய்மை திட்டங்களுக்கு அரசின் செயல்பாடுகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்பதை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் உணர்த்துகிறது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *