நிர்பயா குற்றவாளியின் சீராய்வு மனு தள்ளுபடி: தூக்கு தண்டனை உறுதி

டெல்லி, டிசம்பர்-18

நிர்பயா குற்றவாளிகளில் ஒருவனான அக்சய்குமார் சிங், தூக்கு தண்டனையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், தூக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது.

தலைநகர் டெல்லியில் கடந்த 2012ல் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரில் அக்சய் குமார் சிங் என்பவர், தூக்கு தண்டனையை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷண் மற்றும் போப்பண்ணா அமர்வு முன் நடந்தது.

அப்போது அக்சய்குமார் சிங் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில், நிர்பயா பலாத்கார வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தப்படவில்லை. அக்‌ஷய்குமார் அப்பாவி. எங்களது தரப்பு வாதங்களை கேட்கவில்லை. அரசியல் காரணமாக தூக்கில் போடப்படுகிறார். ஊடகம், பொதுமக்கள் மற்றும் அரசியல் அழுத்தம் காரணமாக தூக்கில் போட நெருக்கடி கொடுக்கப்படுகிறது எனக்கூறினார்.

அப்போது நீதிபதி அசோக் பூஷண் கூறுகையில் விசாரணை முடிந்த பின் அதை சந்தேகத்திற்கு கொண்டு வருவது ஆபத்தானது. மறு சீராய்வு என்பது மீண்டும் விசாரிப்பது அல்ல. அரிதிலும் அரிதான மனுவாக இதனை கருத முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் ஏற்கனவே விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையையும் உறுதி செய்து உத்தரவிட்டனர்.

குற்றவாளிகளான மற்ற 3 பேரின் சீராய்வு மனுக்கள் கடந்த ஆண்டே தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. குற்றவாளிகள் அனைவரின் கருணை மனுக்கள் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது சீராய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதனால் நிர்பயா குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான பணிகளை திகார் சிறை நிர்வாகம் ஏற்கனவே தீவிரமாக மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *