கோவையில் கடந்த 15 ஆண்டுகளாக 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வினா வங்கி புத்தகம் வழங்குகிறோம். – உள்ளாட்சித் துறை அமைச்சர் S.P.வேலுமணி பெருமிதம்

கோவை, டிசம்பர்-18

தமிழகம் பல்வேறு துறைகளில் 86 தேசிய விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கோவையில் தி இந்து நாளிதழின் பியூச்சர் இந்தியா கிளப் மற்றும் அம்மா ஐ.ஏ.எஸ். அகாடமி சார்பில் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, எதிர்காலம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இளைஞர்களை வழிநடத்தும் மாநாடு நடைபெற்றது. இந்த உயர்கல்வி மாநாட்டை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: புரட்சி தலைவி அம்மா பிறந்தநாளையொட்டி கடந்த 15 ஆண்டுகளாக 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வினா வங்கி புத்தகம் வழங்கி வருகிறோம். முதலில் குனியமுத்தூர் பகுதியில் மட்டும் வினா வங்கி புத்தகம் வழங்கப்பட்டது. இதனால் பயன்பெற்ற மாணவர்கள் அளித்த வரவேற்பை தொடர்ந்து அனைத்து பகுதிகளுக்கும் வினா வங்கி புத்தகத்தை கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து, கோவை மாவட்டம் முழுவதும் வினா வங்கி புத்தகம் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த ஆசிரியர் குழுவை கொண்டு வினா வங்கி புத்தகம் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இதேபோல். கடந்த 4 ஆண்டுகளாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் பங்குபெறும் மாணவர்கள் வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு புத்தகங்களும் இலவச பயிற்சிகளும் கொடுத்து வருகிறோம். இதனால், பல மாணவர்கள் அரசு அதிகாரிகளாக உருவாகியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, கோவையில் அம்மா ஐ.ஏ.எஸ். அகாடமி தொடங்கப்பட்டது.

பள்ளிப்படிப்பை முடிக்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். ஆகவேண்டும் என்பது அவர்களின் எண்ணமும், பெற்றோர்களின் எதிர்பார்ப்பும் ஆகும். எனவே தான் மாணவ, மாணவிகள் உயர்பதவியை அடையவேண்டும் என்ற நோக்கத்தில் புரட்சி தலைவி அம்மா பெயரில் தகுதி வாய்ந்த சிறந்த ஆசிரியர்களை கொண்டு பல்வேறு வசதிகளுடன் அம்மா ஐ.ஏ.எஸ். அகாடமி கோவையில் அமைக்கப்பட்டுள்ளது. அம்மா அகாடமியின் தலைவர் எஸ்.பி.அன்பரசன் இதனை சிறப்பாக நடத்தி வருகிறார்.

இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டு மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற பதவிகளில் தேர்வு பெற்று நாட்டிற்கு சேவை செய்யவேண்டும். இந்தியாவிலேயே பலதுறைகளில் தமிழகம் தான் முன்னோடியாக உள்ளது. இதற்காக 86 தேசிய விருதுகளை தமிழக உள்ளாட்சித்துறை பெற்றுள்ளது. இவ்வாறு அமைச்சர் வேலுமணி பேசினார். இந்த நிகழ்ச்சியில், பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் காளிராஜ், மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண்குமார் ஜடாவத், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *