அதிமுகவும், பா.ம.க.வும் தமிழின துரோகிகள்-ஸ்டாலின்

சென்னை, டிசம்பர்-18

வரும் டிச.23-ம் தேதி சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணி நடத்திட திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (டிச.18) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட 11 கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் திருத்த சட்டத்தை திருமபெற வேண்டும் என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், வரும் டிச.23-ம் தேதி சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணி நடத்திட திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: நாட்டினுடையை அமைதியை குலைக்க கூடிய, குழிபறிக்க கூடிய சட்டமாக இந்த திருத்த சட்டம் அமைந்திருக்கிறது. அண்டை நாடுகளின் பட்டியலில் இலங்கை விடுபட்டிருப்பது ஏன்? அகதிகளாக வரும் மக்களில் ஏன் இஸ்லாமியர்களை சேர்க்கவில்லை என்ற கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவளித்த அதிமுகவும், பா.ம.க.வும் தமிழின துரோகிகள். அவர்களை தமிழர்களை மன்னிக்க மாட்டார்கள். மத்திய அரசு சொல்வதை அப்படியே எடப்பாடி பழனிசாமி கேட்கிறார். எங்களது பேரணி நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அனைத்து கட்சி கூட்டம் சாத்தான் வேதம் ஓதுவது போன்று என அமைச்சர் ஜெயக்குமார் கூறியதற்கு, அவருக்கெல்லாம் வேதம் ஓத வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என ஸ்டாலின் கூறினார்.

13 வருடங்களாக திமுக மத்திய அரசில் அங்கம் வகித்தபோது, இலங்கை தமிழர்களுக்கு எதுவும் செய்யவில்லை என முதலமைச்சர் பழனிசாமி கூறியதற்கு பதிலளித்த ஸ்டாலின், முடிந்து போன கதைகளை பற்றி பேசவில்லை, தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண விரும்புவதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *