ஈழத்தமிழர்கள் பற்றி பேச திமுகவுக்கு அருகதை இல்லை-ஈபிஎஸ்

சேலம், டிசம்பர்-18

சேலம் விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து ஏற்கனவே தெளிவாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்தால் இந்திய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. குடியுரிமை சட்ட திருத்தத்தால் இந்தியாவில் உள்ள எந்த மதத்தை சேர்ந்தவர்களுக்கும் பிரச்சனை இல்லை.

இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்பது தான் அதிமுகவின் நிலைப்பாடு. இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அதிமுக வலியுறுத்தியுள்ளது. வேண்டுமென்றே திட்டமிட்டு பொய்யான செய்தியை தமிழகத்தில் ஸ்டாலின் கூறி வருகிறார். காஞ்சிபுரம் போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் கீழ்த்தரமாக பேசியுள்ளார். இலங்கையில் போர் நிறுத்தப்பட்டதாக கருணாநிதி கூறிய தவறான தகவலை நம்பி வெளியே வந்த ஈழத்தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட்டனர்

இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த அந்நாட்டு அரசுக்கு எதிராக திமுக போராட்டம் நடத்தியதா? ஈழப்போரின் போது மத்தியில் ஆட்சியில் அங்கம் வகித்த திமுக ஈழத் தமிழர்களை காக்க செய்தது என்ன? 13 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக ஈழத் தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை பெற்றுத்தரவில்லை? இலங்கை தமிழர்களுக்கு நல்லது செய்வது போல நாடகமாடும் கட்சி திமுக. ஈழத்தமிழர்கள் குறித்து பேச திமுகவிற்கு எந்த தகுதியும் அருகதையும் இல்லை

அதிமுக தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் கொறடா உத்தரவின் அடிப்படையில் மாநிலங்களவையில் எங்கள் எம்பிக்கள் வாக்களித்தனர். அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி வாக்கு அளித்தால் தான் பிரச்சனை.

அரசின் துணைச் செயலாளர் தொலைபேசியில் கூறியதால் மாநிலங்களவையில் வாக்களித்ததாக கூறியது குறித்து எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்திடம் நேரில் கேட்டால் தான் தெரியும். உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுக தயாராக இல்லை – அதனால் தான் நீதிமன்றம் சென்றுள்ளார்கள். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தான் உள்ளாட்சித் தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. இவ்வாறு முதலமைச்சர் பழனிசாமி பேசினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *