குடியுரிமை சட்ட விழிப்புணர்வு: எம்.பி.க்களுக்கு பா.ஜ.க. உத்தரவு

டெல்லி, டிசம்பர்-18

குடியுரிமை சட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கட்சி எம்.பி-க்களுக்கு பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. வடகிழக்கில் அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டங்களில் வன்முறை வெடித்தது.

அதைத்தொடர்ந்து, டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழகம், உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகார் பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் நடத்திய போராட்டத்திலும் வன்முறைகள் அரங்கேறின.

இந்நிலையில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, திமுக எம்பி டி.ஆர்.பாலு, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன், சமாஜ்வாடி தலைவர் ராம் கோபால் யாதவ், ஜெஎல்எஸ் கட்சி தலைவர் சரத் யாதவ் உட்பட 11 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து குடியுரிமை சட்டத்தை ரத்து செய்யக்கோரி கோரிக்கை மனு கொடுத்தனர்.

இதற்கிடையே, குடியுரிமை திருத்த சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலுடன் நடைமுறைக்கே வந்துவிட்ட நிலையில் அது குறித்த போதுமான புரிதல்கள் இல்லை என்ற புகார்கள் பாஜக மேலிடத்திற்கு வந்துள்ளது.

இந்நிலையில், பா.ஜ.க எம்.பி.க்கள் அனைவரும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து வந்து அகதிகளாக தங்கியுள்ளவர்களை நேரில் சந்திக்க வேண்டும் என உத்தரவு போடப்பட்டுள்ளது. அவர்களின் தற்போதைய நிலைமை என்ன என்பதை கண்டறிந்து தகுதி இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு குடியுரிமை வாங்கித் தருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய பாஜக கட்சியில் மொத்தம் 303 எம்.பி.க்கள் உள்ளனர். பா.ஜ.விற்கு பிரதிநிதித்துவம் அல்லாத தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அந்த பகுதிகளைச் சேர்ந்த கட்சிப் பொறுப்பாளர்கள் இந்த பணியை மேற்கொண்டு அதன் விபரங்களை டிச.31க்குள் மேலிடத்துக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *