குடியுரிமை திருத்த சட்டம்: டெல்லியில் மீண்டும் கலவரம் வெடித்தது

டெல்லி, டிசம்பர்-17

தலைநகர் டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் இன்று மாணவர்கள் மற்றும் போலீசாரிடையே மோதல் ஏற்பட்டது. கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டதால் பதற்றம் நிலவியது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும் நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மீண்டும் போராட்டம் நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

டெல்லியின் ஜஃப்ராபாத் பகுதியில் போலீசார், போராட்டக்காரர்கள் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். போராட்டக்காரர்கள் போலீஸ் மீது கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.  வன்முறையாளர்களை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.

இதேபோல், டெல்லியில் சீலம்பூர் பகுதியில் போராட்டக்காரர்கள் போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் வாகனங்களை சேதப்படுத்தியதால் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது. பதற்றம் காரணமாக டெல்லி சீலம்பூர் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. மோதலை தொடர்ந்து சீலம்பூர் முதல் ஜஃப்ராபாத் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.

டெல்லியில் மீண்டும் வன்முறை வெடித்ததால் வெல்கம், ஜஃப்ராபாத், மவுஜ்பூர்- பாபர்பூர், சீலாம்பூர், கோகுல்புரி, ஜோஹ்ரி என்கிளேவ், ஷிவ் விஹார் உள்ளிட்ட மெட்ரோ ரெயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *