உன்னாவ் வழக்கு: குல்திப் செங்காருக்கான தண்டனை விபரம் 20-ம் தேதி அறிவிப்பு

டெல்லி, டிசம்பர்-17

உன்னாவ் நகரில் சிறுமியைப் பலாத்காரம் செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காருக்கான தண்டனை விவரங்கள் வரும் 20-ம் தேதி அறிவிக்கப்படும் என்று டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பங்கார்மாவு தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார். கடந்த 2017-ம் ஆண்டு உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக, குல்தீப் சிங் செங்கார் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் செய்தார்.

உன்னாவ் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்ததால், எம்எல்ஏ செங்கார் கைது செய்யப்பட்டார். அவரைக் கட்சியில் இருந்தும் பாஜக தலைமை நீக்கியது. குல்தீப் சிங் செங்கார் மீது போக்ஸோ சட்டம், பலாத்காரம், ஆட்கடத்தல், மிரட்டல், வன்புணர்வு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிந்த நிலையில் டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் குல்தீப் செங்காரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. குல்தீப் செங்காருக்கான தண்டனை விவரத்துக்கான வாதம் இன்று நீதிபதி தர்மேஷ் சர்மா முன் இன்று விசாரணை நடந்தது.

சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”எம்எல்ஏ குல்தீப் செங்காருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் எளிதான தண்டனை வழங்கிடக்கூடாது” என வாதிட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், ”பாதிக்கப்பட்ட சிறுமியின் எதிர்கால வாழ்க்கைக்குக் கூடுதலாக ரூ.25 லட்சம் வழங்கிட உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்தார்

செங்கார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், “குல்தீப் செங்கார் மக்கள் பணியாற்ற இருப்பதால், அவருக்கு குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்றும், அவருக்கு இரு மைனர் மகள்கள் இருப்பதால், எதிர்கால வாழ்க்கை கருதியும், செங்காரின் சிறை வாழ்க்கை ஒழுக்கமாக இருந்ததை கருத்தில் கொண்டு தண்டனையை குறைக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. மூன்று தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தர்மேஷ் சர்மா, வரும் 20-ம் தேதி குல்தீப் செங்காருக்கான தண்டனை விவரத்தை அறிவிக்கிறேன் என்று கூறி ஒத்திவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *