குடியுரிமை திருத்த சட்டத்திற்கு அதிமுக ஆதரவளிப்பது தமிழின துரோகம்-கமல்ஹாசன் விளாசல்

சென்னை, டிசம்பர்-17

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பது அதிமுக அரசு தமிழ் இனத்திற்கு செய்யும் துரோகம் மட்டுமல்ல வியாபாரத்தின் கட்டாயம் என்றும், திமுக வின் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தால் நிச்சயம் கலந்துக்கொள்வோம் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவிப்பது தேச விரோத சக்திகளின் தொடக்கம், இந்தியாவின் முதுகெலும்பு என்று சொல்லப்படும் கிராமங்களில் விவசாயிகள் தற்கொலையை தடுக்காமல் அரசு சூழ்ச்சி செய்து வருகிறது. வாக்கு வங்கிக்காக சட்ட பிழைகள் செய்வது அரசு மக்களுக்கு எதிராக தொடுக்கும் போர் வியூகம்.

பாகிஸ்தானில் இந்துவுக்கு வழங்கப்படும் உரிமை இலங்கை தமிழர்களுக்கு ஏன் வழங்கப்படவில்லை. கேள்வி கேட்பவனின் ஒடுக்கும் வேலை தான் அரசின் பயங்கரவாதம். கேள்வி கேட்கவே பயப்பட வேண்டும் என்று எதிர்காலத்தின் சமூகத்தை பயப்பட வைக்கும் அடி தான் இது, வேலை வாய்ப்பு இல்லவே இல்லை ஆனால் எதை சாதிக்க இந்த சட்டம் என்ற கேள்விக்கும் நேர்மையான பதில் இல்லை.

தொடர்ந்து பேசிய அவர், வரலாற்றின் முடிவு மக்கள் கையில் தான் உள்ளது. பாம்புகளை கண்டு பயப்படும் படை அல்ல இளைஞர்கள் கூட்டம், கரம் கோர்த்து இவர்களை தலை மூழ்குவோம். அதிமுக அரசு தமிழ் இனத்திற்கு செய்யும் துரோகம் இது. அதிமுக ஆதரவு தெரிவித்தது வியாபார கட்டாயம் அதை அரசியலில் கொண்டு வரக்கூடாது. அமித்ஷா கருத்திற்கு பதிலளித்த கமல்ஹாசன் தான் பிடித்த முயலுக்கு எத்தனை கால்கள் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.

இந்த விவகாரம் தொடர்பாக சரியான பாதையில் சரியான நேரத்தில் எங்கள் எதிர்ப்பை தெரிவிப்போம். சட்ட ரீதியாக இதை சந்திப்போம். குடியுரிமை சட்டம் குறித்து இதுவரை ரஜினி என்னிடம் பேசவில்லை. பேசுவார் என்று நம்புகிறேன். பல்வேறு பிரச்சனைகளை குறித்து பேசுவதற்காக பிரதமரை சந்திக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளப்பட்டுவிட்டது. ஆனால் அவர் இன்னும் அதற்கான நேரம் ஒதுக்கவில்லை. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு திமுக அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தால் நிச்சயம் கலந்துக்கொள்வோம். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *