பா.ஜ.க. ஒரு கோழைத்தனமான அரசு-பிரியங்கா காந்தி விமர்சனம்

டெல்லி, டிசம்பர்-16

டெல்லி கலவரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்., பொதுச் செயலாளர் பிரியங்கா, இது கோழைத்தனமான அரசு என விமர்சித்துள்ளார்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைகழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதில் அரசு பேருந்துகள் போலீசாரின் வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்ததுடன், போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்கினர். இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா, மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்: போலீசார் பல்கலை., க்குள் நுழைந்து மாணவர்களை தாக்கி உள்ளனர். அரசு முன்வந்து மக்கள் குரலுக்கு செவி சாய்க்க வேண்டிய சமயத்தில், பா.ஜ.க. அரசு மாணவர்களையும் வடகிழக்கு மாநிலங்களில் பத்திரிகையாளர்களையும், டெல்லி மற்றும் உ.பி.யிலும் ஒடுக்க முயற்சிக்கிறது. இது கோழைத்தனமான அரசு.

இளைஞர்களின் குரலை அடக்க முடியாது. மக்களின் குரலை கேட்க இந்த அரசு பயப்படுகிறது. இளைஞர்கள் மீது சர்வாதிகார அடக்குமுறையை கொண்டு வர இந்த அரசு முயற்சிக்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *