இந்திய பொருளாதாரத்தை மோடி அழித்துவிட்டார்-ராகுல் காந்தி சாடல்

டெல்லி, டிசம்பர்-14

ஒரே நபராக இந்திய பொருளாதாரத்தை மோடி அழித்துவிட்டார் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

தலைநகர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாரத் பச்சாவ் பேரணியை நடைபெற்று வருகிறது. பொருளாதார மந்தநிலை, குடியுரிமை சட்டம், விவசாயிகள் பிரச்னை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட விஷயங்களில் மத்திய அரசுக்கு எதிராக இந்த கூட்டமானது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா, ப.சிதம்பரம் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, தனி ஆளாக இந்திய பொருளாதாரத்தை பிரதமர் நரேந்திர மோடி அழித்துவிட்டார் என்று குற்றம்சாட்டியுள்ளார். மேலும் பேசிய அவர், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்து, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்தார். கருப்புப் பணத்தை திரும்பிப் பெற இந்நடவடிக்கை என்று உரையாற்றினார். ஆனால், என்ன நடந்தது. அந்த நடவடிக்கையால் இன்று வரை இந்திய பொருளாதாரத்தால் மீண்டு வர முடியவில்லை.

அந்த நேரத்தில் நாடு, 9 சதவிகித வேகத்தில் பொருளாதாரம் வளர்ந்து வந்தது. பொருளாதாரத்தில் சீனாவுடன் இந்தியா போட்டி போட்டு வந்தது. ஆனால், இன்று வெறும் 4% ஆக உள்ளது. மக்கள் வெங்காயத்துக்காக வரிசையில் நிற்கிறார்கள். வெங்காயத்தின் விலை இப்போது கிலோவுக்கு 200 ரூபாயைத் தொட்டுள்ளது.

இந்திய மக்களிடம் பல பொய்களை கூறியதற்காக பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவும் மன்னிப்பு கேட்க வேண்டும். எதிரிகள் நம்மை அழிக்கவில்லை. பிரதமர் மோடி தான் அதனை செய்துள்ளார். எத்தனை விவசாயிகள் இறந்துள்ளார்கள் என்று மோடி அரசுக்கு தெரியாது. அவர்களுக்கு விவசாயிகளைப் பற்றி எந்தவித கவலையும் இல்லை.

பெரும் முதலாளிகளைப் பற்றி மட்டுமே அவருகளுக்கு கவலை. எப்போதும் இல்லாத அளவுக்கு நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களை பற்றி பிரதமர் மோடிக்கு கவலை இல்லை. அங்கு போராட்டம் நடைபெற்ற முக்கிய காரணம் மத்திய அரசு தான், ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், ரேப் இன் இந்தியா விவகாரத்தில் மன்னிப்பு கேட்பது குறித்து பேசிய அவர், என் பெயர் ராகுல் சாவர்க்கர் அல்ல, ராகுல் காந்தி. உண்மையை பேசியதற்காக எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தவறிய பிரதமர் மோடி தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *