5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!!!

சென்னை, டிசம்பர்-14

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், கடந்த 24 மணி நேரத்தில் கடலூர், திருப்பூண்டியில் தலா 8 செ.மீட்டரும், நாகப்பட்டினம், குடவாசலில் தலா 6 செ.மீட்டரும், திருத்துறைபூண்டியில் 5 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது என்றார்.

தமிழகம், கேரள எல்லையை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடுமென அவர் கூறினார்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் புவியரசன் குறிப்பிட்டார்.

சென்னையின் அதிகபட்ச வெப்பநிலை 84.2 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 75.2 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும் என்று அவர் தெரிவித்தார். வருகிற 20-ஆம் தேதி அன்று தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளதாக அவர் கூறினார். 

வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் சராசரி மழை அளவு 44 செ.மீட்டர் என்ற புவியரசன், அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இன்று வரை 43 செ.மீட்டர் மழை பெய்துள்ளது என்றார்.

தமிழகத்தில் வேலூர், பெரம்பலூர், மதுரை, திருவண்ணாமலை, சென்னை ஆகிய மாவட்டங்களில் மழை குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *