அண்ணா உருவப்படத்துக்கு முதல்வர், துணை முதல்வர் மலர் தூவி மரியாதை
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள உருவப் படத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
சென்னை, செப்-15
பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அண்ணாவின் 111-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அண்ணாசாலையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் உள்பட அமைச்சர்கள் ஞாயிற்றுக்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அண்ணாவின் பிறந்த தினமான செப்டம்பர் 15 ஆம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
அதன்படி, அண்ணாவின் 111-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள படத்துக்கு இன்று காலை 10 மணியளவில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், சட்டப்பேரவை, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், வாரியத்தலைவர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். சென்னையில் அண்ணா பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் உள்ளிட்டோர் மாலை அணிவிக்கும் விழாவுக்கு அதிமுக கட்சிக் கொடிகள், பேனர்கள் எதுவும் வைக்கப்படவில்லை.