’ரேப் இன் இந்தியா’ விமர்சனத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது: ராகுல் திட்டவட்டம்

டெல்லி, டிசம்பர்-13

’ரேப் இன் இந்தியா’ விமர்சனத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன். டெல்லியை பலாத்காரத்தின் தலைநகரம் என்று மோடி பேசிய வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஜார்க்கண்ட் மாநில தேர்தல் பிரசாரத்தின்போது ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் நாட்டை உயர்த்தப் போவதாக மோடி தெரிவித்திருந்தார்.

ஆனால், இன்று நாடு முழுவதும் அதிகரித்து வரும் பாலியல் பலாத்காரத்தால் ‘ரேப் இன் இந்தியா’ என்று சொல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என ராகுல் நேற்று பேசியிருந்தார். இந்த கருத்துக்கு பா.ஜ.க.வினர் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இப்படிப்பட்ட உறுப்பினர் இந்த அவையில் அமருவதற்கே அருகதையற்றவர் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

இந்தியப் பெண்களை எல்லாம் இழிவுப்படுத்தும் வகையில் இப்படிப்பட்ட மோசமான கருத்தை தெரிவித்த ராகுல் காந்தி இதற்காக மக்களவையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி உள்ளிட்ட பாஜக பெண் எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

இன்று பிற்பகல் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி ’ரேப் இன் இந்தியா’ விமர்சனத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

முன்னர் டெல்லியை பலாத்காரத்தின் தலைநகரம் என்று மோடி பேசிய வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. அனைவரும் பார்த்து தெரிந்துக் கொள்ளும் வகையில் அதை எனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுவேன்.

வடகிழக்கு மாநிலங்களில் பற்றி எரியும் மக்களின் போராட்டத்தை திசை திருப்பும் முயற்சியாக எனது விமர்சனத்தை பாஜகவினர் பெரிதாக்கி வருகின்றனர் எனவும் ராகுல் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *