உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிடமாட்டோம்!!!

டெல்லி, டிசம்பர்-13

தமிழகத்தில் பல்வேறு தடைகள் மற்றும் நீதிமன்ற வழக்குகளால் உள்ளாட்சித் தேர்தல் தொடர்ந்து தள்ளிப்போனது. நீண்டகால சட்டப்போராட்டத்திற்குப் பிறகு, ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு பணிகள் தொடங்கின. 

அதன்பின்னர், ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி திமுக, காங்கிரஸ், மதிமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை எனக் கூறி இந்த வழக்கை தொடர்ந்தன. 

இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு, உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை விதிக்க மறுத்துவிட்டனர். அதேசமயம் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை பணிகளை 3 மாதங்களில் முடித்து தேர்தலை நடத்தவும் உத்தரவிட்டனர். இதனையடுத்து உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்படைந்தது. அரசியல் கட்சிகளும் தேர்தல் களப்பணியில் தீவிரம் காட்டின.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான உத்தரவில் சந்தேகம் இருப்பதாக கூறி திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு முன்வைக்கப்பட்டது. தி.மு.க. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான நீதிமன்ற உத்தரவு தொடர்பாக சில சந்தேகங்களை எழுப்பினார். 

அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, ‘மீண்டும் மீண்டும் ஒரே விஷயத்தை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதன்மூலம் நேரத்தை விரயம் செய்கிறார்கள். தயவு செய்து இதை ஏற்க கூடாது’ என வாதிட்டார். 

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் மீண்டும் தலையிட விரும்பவில்லை எனக் கூறி திமுகவின் கோரிக்கையை நிராகரித்தனர். எனவே, திட்டமிட்டபடி டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *