நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற குழு அமைப்பு-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னை, டிசம்பர்-13

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாமல் இருக்க தொடர்ந்து கண்காணிக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்படவுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள நடைபாதைகள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, நீர்நிலைகளைளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மீண்டும் அங்கு ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறு கண்காணிக்க மாநகராட்சி அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது: சென்னை நகர்ப்புற பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் ஆக்கரமிப்புகளை அகற்றி மறுசீரமைத்து மீண்டும் அங்கே ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் கண்காணிக்க மாநகராட்சி அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.

மாநகராட்சி கண்காணிப்பு குழுவினர் மறுசீரமைப்பு பணிகளோடு நீர்நிலைகளில் கழிவுகள் சேராவண்ணம் பாதுகாத்தல், நீர்நிலைகளின் கரைகளை வலுப்படுத்துதல், நடைபாதைகளை அமைத்தல், தெருவிளக்குகள் அமைத்தல், அவைகளை பராமரித்தல் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்வர்.

சென்னை நகர்புறத்திற்குட்பட்ட நீர்நிலைகளில் 80% பணிகள் முடிவடைந்த நிலையில் அவைகளின் மறுசீரமைப்பு முழுவதும் முடிந்தவுடன் எஞ்சிய நீர்நிலைகள் மறுசீரமைப்பு பணிகள் 2020 ஜனவரி மாதம் இறுதியில் துவங்கும். இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *