திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது!!!

சென்னை, டிசம்பர்-13

குடியுரிமை மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

குடியுரிமை திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. இந்த மசோதாவை கண்டித்து அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மாணவர்கள், பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சென்னையில் திமுக சார்பில் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது ‘கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம். குடியுரிமை மசோதாவை கண்டிக்கிறோம்’, ‘காப்பாற்று, காப்பாற்று இலங்கை அகதிகளை காப்பாற்று’, ‘இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பாதே’, ‘திரும்ப பெறு, திரும்ப பெறு, குடியுரிமை திருத்த மசோதாவை திரும்ப பெறு’ என மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு அளித்த எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராகவும் கண்டன முழக்கமிட்டனர். பின்னர் மேடையில் குடியுரிமை சட்ட திருத்த நகலை கிழித்து எறிந்தனர்.

அதன்பிறகு மேடையை விட்டு இறங்கி உதயநிதி ஸ்டாலின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டார். அவரை போலீசார் கைது செய்தனர். அவருடன் சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான இளைஞர் அணியினரையும் போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *