பேனர்கள் வைக்க வேண்டாம் – விஜய், சூர்யா அறிவுறுத்தல்
பிகில் பட இசை வெளியீட்டு நிகழ்ச்சியின் போது ரசிகர்கள் யாரும் பேனர் வைக்க வேண்டாமென நடிகர் விஜய் அறிவுறுத்தி உள்ளார். இதேபோல், நடிகர் சூர்யாவும், ரசிகர்கள் யாரும் பேனர்கள் வைக்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை, செப்-15
சென்னை பள்ளிக்கரணை அருகே அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால், அவரது மகன் திருமணத்துக்காக வைத்திருந்த பேனர் சரிந்து விழுந்ததில் சுபஸ்ரீ என்ற 23 வயது பெண் உயிரிழந்தார்.
தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்நிகழ்வை தொடர்ந்து அரசியல் தலைவர்கள், பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டுமென கோிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விஜய் பேனர் வைக்க வேண்டாமென தனது ரசிகர் மன்றங்களுக்கு அறுவுறுத்தி உள்ளார். பேனர் வைக்கப்படவில்லை என்பதை அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார். குறிப்பாக பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் யாரும் பேனர் வைக்க கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேபோல், படம் வெளியாகும்போது ரசிகர்கள் பேனர்களை வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். காப்பான் திரைப்பட விழாவில் பேசிய நடிகர் சூர்யா, “அனைவருக்கும் கவலையளிக்கும் விதமாக ஒரு துயரச் சம்பவம் நடந்துள்ளது. படம் வெளியாகும்போது ரசிகர்கள் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும். ரசிகர்கள் செய்யும் ரத்த தானம் உள்ளிட்ட விஷயங்களைக் கவனித்து வருகிறேன். பேனர் வைப்பதைத் தவிர்த்துவிடுங்கள் அந்தத்தொகையைக் கல்விக்குச் செலவிடுங்கள்” என்றார்.