திருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோ வெளியிட்ட நபர் கிறிஸ்டோபர் கைது

திருச்சி, டிசம்பர்-12

சிறுவர், சிறுமிகளை ஆபாசமாக சித்தரிக்கும் படங்களை, சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர்ந்ததாக திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளான். 

இணையத்தில் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் மீது நடவடிக்கை பாய போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல் பரவியது. ஆனால் சிறுவர், சிறுமிகளை ஆபாசமாக சித்தரிக்கும் படங்களை பகிர்பவர்கள், பதிவிறக்குபவர்கள், பார்ப்பவர்கள் மீது தான் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை விளக்கம் அளித்தது.

இதுதொடர்பாக சுமார் 3 ஆயிரம் பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், சம்மன் அனுப்பி, விசாரணைக்கு பிறகு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை கூறியிருந்தது. இந்நிலையில், சிறார்களின் ஆபாச படங்களை பகிர்ந்ததாக திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் என்ற 42 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக வலைத்தள பதிவுகளை கண்காணித்து வந்ததில், ஒரு குறிப்பிட்ட செல்போன் எண் மூலம் நிலவன் நிலவன், ஆதவன் ஆதவன் என்ற பெயரில் ஃபேஸ்புக் ஐடிகளை உருவாக்கி ஆபாச படங்களை கிறிஸ்டோபர் பகிர்ந்து வந்தது கண்டறியப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

போக்சோ சட்டத்தின் 13, 14,15 ஆகிய பிரிவுகளின் கீழும், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 67(ஏ), 67(பி) ஆகிய பிரிவுகளின் கீழும், திருச்சி கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல்நிலையை போலீசார் கிறிஸ்டோபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபரை, திருச்சி மகளிர் நீதிமன்ற நீதிபதி வனிதா முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தி, 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *