பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாளில் தூக்குத் தண்டனை- ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி

அமராவதி, டிசம்பர்-12

ஆந்திராவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 21 நாளில் தூக்கு தண்டனை விதிக்கும் சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

என்கவுண்டரில் 4 பேர் சுட்டு கொல்லப்பட்டதற்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு தெரிவித்தார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவையும், போலீசாரையும் பாராட்டினார்.

இது தொடர்பாக அவர் ஆந்திர சட்டசபையில் பேசும் போது, பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு 21 நாட்களுக்குள் விசாரணை நடத்தி தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார்.

நிர்பயா பெயரில் அனைத்து மாநிலங்களிலும் பாலியல் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகளாகியும் இன்னும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை பாலியல் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்குவதே சரியானதாக இருக்கும் என்றார்.

அதன்படி நேற்று நடந்த ஆந்திர அமைச்சரவை கூட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 21 நாளில் தூக்கு தண்டனை விதிக்கும் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 21 நாட்களுக்குள் விசாரணை நடத்தி தண்டனை வழங்கப்படும். இதில் முதல் 7 நாட்களில் விசாரணைகள் அனைத்தும் முடிக்கப்படும்.

ஆந்திர பிரதேச திஷா சட்டம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய சட்டம் இன்று ஆந்திர சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. இந்த சட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் ஆந்திரா மாநிலம் தான் பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் முதல் மாநிலமாக திகழும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *