உள்ளாட்சி தேர்தலுக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

டெல்லி, டிசம்பர்-11

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடையில்லை என்று கூறிய உச்சநீதிமன்றம், 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, உள்ளாட்சித் தேர்தலை நடத்துமாறு, உத்தரவிட்டிருக்கிறது. 

உள்ளாட்சி தேர்தலில் முறையாக இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்று கூறி திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள், உச்சநீதிமன்றத்தில், மனுக்களை தாக்கல் செய்தன. இந்த வழக்கை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது.

அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் தாக்கல் செய்துள்ள மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார். மேலும், உச்சநீதிமன்ற உத்தரவுபடி, புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தப்போவதில்லை என்றும், தமிழ்நாடு அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டது.

திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும் வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்டே, 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, உள்ளாட்சித் தேர்தலை நடத்த திமுகவுக்கு சம்மதமா? என கேள்வி எழுப்பினார். இதைத் தான், தங்கள் தரப்பில், தொடர்ந்து வலியுறுத்துவதாக திமுக வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

இறுதியாக, அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டில், ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு தேர்தல் நடத்த தடையில்லை என்றும், புதிய அறிவிப்பாணையின் படி உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்றும் உத்தரவிட்டது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துமாறு உத்தரவிட்டிருக்கும் உச்சநீதிமன்றம், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில், 3 மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் ஆணையிட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *