கீழடி அகழாய்வு: முடிவுகள் எப்போது வெளியீடு-ராமதாஸ்

சென்னை, டிசம்பர்-11

கீழடியில் நடத்தப்பட்ட முதல் மூன்று கட்ட அகழாய்வின் முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து பா.ம.க. நிறுவன தலைவர் வெளியிட்டுள்ள அறிகையில், தமிழர்களின் தொல்லியல் பெருமிதமான கீழடியில் நடத்தப்பட்ட முதல் மூன்று கட்ட அகழாய்வின்  முடிவுகள் இன்று வரை வெளியிடப்படவில்லை. இவற்றை வெளியிட உயர்நீதிமன்றம் இருமுறை விதித்த கெடுவும் முடிந்து விட்ட நிலையில், அகழாராய்ச்சி முடிவுகள் வெளியிடப்படாதது வருத்தமளிக்கிறது.

‘‘கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி’’ என்று தமிழர்கள் பெருமிதப்பட்டு வந்த நிலையில், அதை உறுதி செய்வதற்கான ஆதாரமாக கீழடி அகழாய்வு அமைந்திருக்கிறது. அங்கு நடத்தப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களின் மூலம் தமிழர் நாகரிகம் 2600 ஆண்டுகள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழர் நாகரிகம் இன்னும் பழமையானது என்பது அனைவரும் நன்கு அறிந்த ஒன்று என்றாலும் கூட, அதை நிரூபிப்பதற்கு தொல்லியல் ஆதாரங்கள் தேவை.

அதற்காக  கீழடியில் நடத்தப்பட்ட முதல் மூன்று கட்ட அகழாய்வுகளை வெளியிட வேண்டும் என்று கடந்த இரு ஆண்டுகளாக பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், ஆய்வு முடிந்து இரு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்று வரை அகழாய்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.

உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் எதிர்பார்க்கப்படும் 3 கட்ட ஆய்வு முடிவுகள் வெளியிடப்படாமல் தாமதமாவதற்கு காரணம் மத்திய தொல்லியல்துறையின் அலட்சியம் தான். 3 கட்ட ஆய்வு முடிவுகளை விரைந்து வெளியிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை கடந்த ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி விசாரித்த உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, கீழடியில் முதல் 3 கட்ட அகழாய்வுகளை மேற்கொண்ட மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருஷ்ணன் அகழாய்வு அறிக்கையை தயாரிக்க வேண்டும்.

அடுத்த 7 மாதங்களில், அதாவது கடந்த மே மாதத்திற்குள் அதை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணையிட்டிருந்தது. ஆனால், அதற்கான தொடக்கக்கட்ட பணிகள் கூட நடைபெறவில்லை.

நடப்பாண்டின் மார்ச் 15-ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அறிக்கை தயாரிப்பு பணிக்காக அமர்நாத் இராமகிருஷ்ணன் விடுவிக்கப்படாததை அறிந்த உயர்நீதிமன்றக் கிளை,  உடனடியாக அவரை பணியிடமாற்றம் செய்ய ஆணையிட்டதுடன், அடுத்த 7 மாதங்களில் அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டது.  

அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 15-ஆம் தேதிக்குள் முதல் 3 கட்ட அகழாய்வு அறிக்கைகள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கெடு முடிந்து இரு மாதங்களாகியும் கூட அகழாய்வு அறிக்கைகள் இன்னும் தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படவில்லை.

கீழடி அகழாய்வு அறிக்கைகள் தாமதமாவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. கீழடியில் இது வரை மொத்தம் 5 கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. முதல் 3 கட்ட ஆய்வுகள் 2015 – 2017 காலத்தில் மத்திய தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டன. நான்காம் கட்ட ஆய்வு 2018-ஆம் ஆண்டிலும், ஐந்தாம் கட்ட ஆய்வு நடப்பாண்டிலும் மாநில தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட நான்காம் கட்ட ஆய்வுகளின் முடிவுகள் நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில்  வெளியிடப்பட்டு விட்ட நிலையில், 2015&ஆம் ஆண்டில் நடந்த முதற்கட்ட ஆய்வு முடிவுகள் இன்று வரை வெளியிடப்படாததற்கு அரசியல் காரணங்களைத் தவிர வேறு காரணங்கள் இருக்க முடியாது.

ஆய்வு அறிக்கையை தயாரிக்க வேண்டிய அமர்நாத் கோவாவில் பணியில் உள்ளார். அவருக்கு உதவ வேண்டிய பணியாளர்கள் கர்நாடகத்திலும், ஆந்திரத்திலும் உள்ளனர். ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய பொருட்கள் தமிழகத்தில் உள்ளன. இவர்களை ஒருங்கிணைக்க மத்திய தொல்லியல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக ஆய்வறிக்கை தயாரிப்பு பணிகள் நடைபெற்று விடாமல் தடுப்பதற்கான சதிகளை சில சக்திகள் திரைமறைவில் இருந்து செய்து கொண்டு வருகின்றன. கீழடி அகழாய்வு அறிக்கைகள் இன்று வரை வெளியிடப்படாததற்கு இத்தகைய சதிகள் தான் காரணமாகும்.

தமிழர் நாகரிகம் தான் உலகின் மூத்த நாகரிகம் என்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டு விடக் கூடாது என்று நினைக்கும் ஒரு தரப்பினர் தான் இத்தகைய முட்டுக்கட்டைகளை போடுகின்றனர். தமிழர்களின் பாரம்பரியப் பெருமையை யாரோ சிலர் மறைக்க நினைப்பதை அனுமதிக்கக் கூடாது.  

இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, முதல் மூன்று கட்ட ஆய்வு அறிக்கைகளை  விரைந்து வெளியிடச் செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், கீழடியில் ஆறாம் கட்ட ஆய்வுகளை ஏற்கனவே திட்டமிட்டபடி அடுத்த மாதத்தில் தமிழக அரசு தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *