பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்கு: 16-ல் தீர்ப்பு

டெல்லி, டிசம்பர்-10

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. தொடர்புடைய உன்னாவ் கற்பழிப்பு வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 16-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் சிறுமி ஒருவர் 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதன்பின் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 13ந்தேதி செங்கார் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள உன்னாவ் விவகாரத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு கடந்த ஆகஸ்டு 1ந்தேதி விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையின்போது, நீதிபதிகள் 2 அதிரடி உத்தரவு பிறப்பித்தார்கள்.

முதல் உத்தரவு, உன்னாவ் சிறுமி கற்பழிப்பு, விபத்து மற்றும் தொடர்புடைய பிற வழக்குகள் என மொத்தம் 5 வழக்குகளையும் டெல்லிக்கு மாற்ற வகை செய்துள்ளது.

இரண்டாவது உத்தரவு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உத்தரபிரதேச மாநில அரசு ரூ.25 லட்சத்தை இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என்று கூறுகிறது.

இந்நிலையில், இந்த வழக்கில் சி.பி.ஐ. நேற்று தனது வாதங்களை முன்வைத்து பின்னர் முடித்து கொண்டது.  கடந்த டிசம்பர் 2ந்தேதி கேமிரா முன்னிலையில் அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், இந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  இதில், வழக்கின் தீர்ப்பினை நீதிபதி வருகிற 16ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டு உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *