திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை. டிசம்பர்.10

தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான கார்த்திகை  தீபத்திருநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி,திருவண்ணாமலையில்   2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது.

நினைத்தாலே முக்தி தரும்  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குகிறது.  இங்கு இறைவன் அடிமுடி காணா அண்ணா மலையானாக அருள் பாலித்து வருகிறார்.

புகழ்பெற்ற  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில்  ஆண்டுதோறும்  கார்த்திகை தீபத்திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதேபோல் இந்தாண்டுக்கான தீபத்திருவிழா, கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.10 நாட்களாக நடைபெறும் விழாவில், ஒவ்வொரு நாளும் காலை மற்றும் இரவு நேரங்களில் சுவாமிகள் திருவீதி உலா நடைபெற்றது.  இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் 7ம் தேதி நடைபெற்றது.

 இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை அண்ணாமலையார் கருவைறை முன்பு பரணி தீபம் ஏற்றும்  நிகழ்வு நடைபெற்றது. இதற்காக நள்ளிரவு முதலே அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தி முழக்கங்களை எழுப்பி வழிப்பட்டனர். 

இதனைத் தொடர்ந்து  சிவனும், சக்தியும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும்  வகையில் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலில் எழுந்தருளி திருக்காட்சி அளித்தார். அப்போது அண்ணாமலையானுக்கு அரோகரா  என்று விண்ணை பிளக்கும் பக்தி முழக்கம் ஒலிக்க  கோயிலில் அகண்ட தீபம் ஏற்றப்பட்டது.  அதே வேளை 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை மீது, 5 அடி உயரமும், 200 கிலோ எடையும் கொண்ட மகா தீப கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. மகா தீப விளக்கு ஏற்ற 3 ஆயிரத்து 500 கிலோ நெய், 11 ஆயிரம் மீட்டா் காடா துணியால் ஆன திரி நூல் பயன்படுத்தப்பட்டுள்ளது.  மகா தீபம் ஏற்றப்பட்டதும் திருவண்ணாமலையை சுற்றியுள்ள  கிராமங்களில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில்  அகல் விளக்குகளை ஏற்றி வழிப்பட்டனர்.

திருவண்ணாமலை மகா தீபம், சுற்றுப்புறத்தில் 40 கிலோ மீட்டர் தூரம் வரையிலான பகுதிகளில் தெரியும்.   தொடர்ந்து 11 நாட்களுக்கு இந்த தீபம் தரிசனத்தை பக்தர்கள் கண்டு  வழிபடலாம்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *