குடியுரிமை மசோதாவில் திருத்தம் செய்யாவிடில் ஆதரவில்லை-சிவசேனா

மும்பை, டிசம்பர்-10

குடியுரிமைத் திருத்த மசோதாவிற்கு மக்களவையில் ஆதரவாக வாக்களித்த சிவசேனா மாநிலங்களவையில் ஆதரவளிக்கப்போவதில்லை என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே திடீரென அறிவித்துள்ளார்.

குடியுரிமைத் திருத்த மசோதாவை மக்களவையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்தார். ஏறக்குறைய 9 மணிநேரம் நீண்ட விவாதத்துக்குப்பின் மசோதா நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

மக்களவையில் இந்த மசோதா நிறைவேறியுள்ள போதிலும், மாநிலங்களவையில் நிறைவேறுமா என்ற கேள்வியுள்ளது.
245 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் தற்போது 238 எம்.பிக்கள் உள்ளனர். இதில் ஒரு மசோதாவை நிறைவேற்ற 120 எம்.பி.க்கள் ஆதரவு தேவை.

இதில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு 102 எம்.பி.க்கள ஆதரவு இருக்கிறது. இதில் பாஜகவுக்கு 81 எம்.பி.க்களும், ஐக்கிய ஜனதா தளம் 6, சிரோன்மணி அகாலிதளம் 3 உறுப்பினர்கள், இந்தியக் குடியரசுக் கட்சிக்கு ஒரு எம்.பி. நியமன எம்.பி.க்கள் என 102 பேர் ஆதரவு இருக்கிறது. இன்னும் 18 எம்.பி.க்கள் ஆதரவு பாஜகவுக்கு தேவை.

இந்தநிலையில் மாநிலங்களவையில் மசோதாவுக்கு ஆதரவு அளிக்க சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நிபந்தனை விதித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘‘இந்த மசோதாவில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என நாங்கள் மக்களவையில் வலியுறுத்தினோம். ஆனால் அதனை மத்திய அரசு செய்யவில்லை. இந்த மாற்றங்களை செய்தால் மட்டுமே மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவளிப்போம். அதனால் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிப்போம் என எதிர்பார்க்க முடியாது’’ எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *