உள்ளாட்சி தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிட தடை!!!

சென்னை, டிசம்பர்-10

உள்ளாட்சி தேர்தலில், எந்த கட்சிக்கும் ரஜினி ஆதரவு இல்லை என ரஜினி மக்கள் மன்றம் அறிவித்துள்ள நிலையில், ரசிகர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. இன்னும் அரசியல் கட்சி தொடங்கப்படாத சூழலில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

அதில், உள்ளாட்சி தேர்தலில் ரஜினிகாந்தின் ஆதரவு யாருக்கும் இல்லை. ரஜினி மக்கள் மன்றத்தின் பெயரிலோ, மன்றத்தின் கொடியோ, தலைவரின் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தி வாக்கு சேகரிக்க கூடாது. அப்படி செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் ரஜினி ரசிகர்கள் சிலர் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இன்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் மாநில தலைமையின் உத்தரவுப்படி திருச்சி மாவட்டத்தின் மாநகர, ஒன்றிய, நகர பகுதிகளில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தில் சார்பில் யாரும் போட்டியிடவோ, யாருக்கும் ஆதரவாக வாக்கு சேகரிக்கவோ கூடாது.

மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக மாநில நிர்வாகி சுதாகர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இச்செய்தியை மிகவும் கண்டிப்புடன் வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *