காவல் துறையினர் 130 பேருக்கு அண்ணா பதக்கம்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையைச் சேர்ந்த 130 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை, செப்-14

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, தமிழ்நாடு விரல்ரேகைப் பிரிவு அலுவலர்கள் மற்றும் தடய அறிவியல் துறை அறிஞர்கள் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும் மற்றும் பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் நாள் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு, காவல் துறையில் காவல் கண்காணிப்பாளர் முதல் முதல்நிலை காவலர் வரையிலான 100 அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையில் மாவட்ட அலுவலர் முதல் தீயணைப்பு வீரர் நிலை வரையிலான 10 அலுவலர்களுக்கும், சிறைத்துறையில் துணை சிறை அலுவலர் முதல் முதல்நிலை சிறைக்காவலர் வரையிலான 10 அலுவலர்களுக்கும், ஊர்க்காவல் படையில் மண்டல தளபதி முதல் பிரிவு தலைவர் வரையிலான 5 அலுவலர்களுக்கும், விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும் தடய அறிவியல் துறை அதிகாரிகள் முறையே ஒரு துணை இயக்குநர் மற்றும் ஒரு அறிவியல் அலுவலர் ஆகியோருக்கு, அவர்களின் மெச்சத்தகுந்த பணியினை அங்கீகரிக்கும் வகையில் “மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள்” வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பதக்கங்கள் பெறுகின்ற அலுவலர்களுக்கு அவரவர் தம் பதவிக்கேற்றவாறு, பதக்க விதிகளின்படி ஒட்டு மொத்த மானியத் தொகையும் வெண்கல பதக்கமும் அளிக்கப்படும்.

மேலும், தமிழக முதலமைச்சரின் வீரதீர செயலுக்கான காவல் பதக்கம் மணல் திருட்டை தடுக்கும்பொழுது தன்னுயிர் நீத்த எஸ்.ஜெகதீஷ் துரை (இறப்பிற்கு பின்), முதல் நிலைக் காவலர்-2477 அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அன்னாரின் குடும்பத்திற்கு பண வெகுமதி ரூ.5 இலட்சம் வழங்கப்படும்.

பின்னர் நடைபெறும் விழா ஒன்றில், பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு முதல்வர் இப்பதக்கங்களை வழங்குவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *