மக்களவையில் நிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா!!!

டெல்லி, டிசம்பர்-10

குடியுரிமை சட்டதிருத்த மசோதா, 7 மணி நேரங்களுக்கும் மேலான நீண்ட விவாதத்துக்குப்பின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 311 எம்.பி.க்கள் ஓட்டளித்தனர். எதிராக 80 உறுப்பினர்கள் வாக்களித்தனர்

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு, சமீபத்தில், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதாவை, இரு அவைகளிலும் நிறைவேற்றி, சட்டமாக அமல்படுத்த, மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

இந்நிலையில், நேற்று (டிச.,9) மசோதாவை, உள்துறை அமைச்சர் அமித்ஷா, லோக்சபாவில் தாக்கல் செய்தார். விவாதத்தின் போது, குடியுரிமை சட்ட மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என அமித்ஷா விளக்கமளித்தார். ஆனால் காங்., கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஓவைசி, மசோதாவின் நகலை கிழித்து எறிந்து பரபரப்பை ஏற்படுத்தினார். தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகளும் மசோதாவை எதிர்த்தன. மசோதாவுக்கு அதிமுக முழு ஆதரவு தெரிவித்தது.

மசோதா மீது 9 மணி நேரத்திற்கும் மேல் நீண்ட விவாதம் நடந்தது. விவாதத்திற்கு பின், ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 311 ஓட்டுகளும், எதிராக 80 ஓட்டுகளும் பதிவாகின. இதனையடுத்து லோக்சபாவில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

பிரதமர் மோடி நன்றி:

நீண்ட, விரிவான விவாதத்துக்குப்பின், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது மகிழ்ச்சி அளிக்கிறது. மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டளித்த அனைத்து எம்.பி.,க்களுக்கும் நன்றி. மசோதாவின் அனைத்து அம்சங்களையும் தெளிவாக விளக்கிய, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு என் பாராட்டுக்கள். விவாதத்தின்போது எம்.பி.,க்கள் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் அவர் சிறப்பாக பதிலளித்தார். இவ்வாறு அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மசோதா பற்றி அமித்ஷா பேச்சு:

இந்த மசோதா வரலாற்று சிறப்பு மிக்க மசோதாவாகும். நேரு-லியாகத் உடன்படிக்கை செய்ய முடியாததை இந்த மசோத நிறைவேற்றும். இதனால் அரசியல் சாசன சட்டப்பிரிவு 14 மீறப்படவில்லை.

அண்டை நாடுகளில் மத ரீதியாக சிறுபான்மையினர் ஒடுக்கப்படும் போது ஊமைப் பார்வையாளர்களாக நாம் இருக்க முடியாது. வரலாற்றில் பல காலக்கட்டங்களில் விதிவிலக்கின்றி நாம் பலருக்கும் புகலிடம் அளித்துள்ளோம். நாட்டில் முஸ்லிம் மக்கள் தொகை 9.8%லிருந்து 14% ஆக அதிகரித்துள்ளது. இந்த மசோதா இந்திய முஸ்லிம்களையும் அவர்களது உரிமைகளையும் ஒருபோதும் பாதிக்காது. அகதிகள் பயப்பட வேண்டாம், சட்ட விரோதமாக குடியேறுபவர்களை வரவேற்க மாட்டோம் இவ்வாறு அமித்ஷா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *