அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: அரசு மவுனம் காப்பது ஏன்? –ராகுல்

பார்க்காகோ, டிசம்பர்-09

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3-வது கட்டமாக, சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஹசாரிபார்க் மாவட்டம், பார்க்காகோ நகரில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது: உலகில் பாலியல் பலாத்காரங்களின் தலைநகராக இந்தியா மாறி இருக்கிறது. நாளுக்கு நாள் நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பலாத்கார குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால், பிரதமர் மோடி அதுகுறித்து கண்டிக்காமல் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்.

பெண்களும், விவசாயிகளும் தோட்டாக்களால் குறிவைக்கப்படுகிறார்கள். பெண்கள் தங்கள் வீட்டை விட்டு அச்சமில்லாமல் வர முடியவில்லை.

விவசாயிகள் நிலத்தைப் பாதுகாக்க நாங்கள்தான் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தைக் கொண்டு வந்தோம். இந்தச் சட்டத்தின்படி, பஞ்சாயத்து அனுமதியில்லாமல் விவசாயிகளிடமிருந்து நிலத்தை எடுக்க முடியாது. ஊழலுக்கு எதிராகப் போராடுகிறேன் என்று பிரதமர் மோடி பேசுகிறார். ஆனால், ஜார்க்கண்ட் முதல்வர்தான் அதிகமான ஊழல் அரசியல்வாதியாக இருக்கிறார்.

உங்களின் பணம் அதானிக்கும், அம்பானிக்கும் அளிப்பதால்தான் பிரதமர் மோடியின் உருவம் தொலைக்காட்சியில் தெரிகிறது. விவசாயிகளையும், ஏழை மக்களையும் மோடி ஆரத் தழுவிப் பார்த்துள்ளீர்களா?

ஆனால், தொழிலதிபர்களை அவர் கட்டி அணைத்து வரவேற்பார். 15 தொழிலதிபர்களுக்காகவே இந்த அரசு நடத்தப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் அந்த 15 தொழிலதிபர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை நிறுத்தவும் திட்டமிட்டுள்ளது. பணக்காரர்களுக்குக் கடன் தள்ளுபடி அளிக்கும் மோடி அரசு, ஏழைகளையும், விவசாயிகளையும் புறக்கணிக்கிறது. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாது”. இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *