குடியுரிமை மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்?

சென்னை, டிசம்பர்-09

காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புகளுக்கு மத்தியில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்திய குடியுரிமை சட்டம் 1955 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. குடியுரிமை சட்டத்தில் மாற்றம் கொண்டுவரும் திருத்தம் தான் இந்த இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவாகும். இந்தியாவில் பிறந்தவா்களுக்கும், நாட்டில் குறைந்தபட்சம் தொடா்ந்து 11 ஆண்டுகள் தங்கியிருந்தவா்களுக்கும் கடந்த 1955-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தின் மூலம் குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இந்தச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள புதிய மசோதா வழிவகுக்கிறது.

அந்தத் திருத்தங்களின்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து மத பிரச்சனை காரணமாக இந்தியாவுக்கு முறையின்றி வரும் மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். அவ்வாறு குடிபெயரும் மக்களை அரசு கைது செய்யாது. இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு, தங்களது பெற்றோா்கள் பிறந்த இடத்துக்கான ஆதாரத்தை வழங்க வேண்டியது அவசியம்.

மேலும், இந்தச் சட்டத் திருத்த மசோதா மூலம் குடியுரிமை பெற விரும்புவோா், 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதியன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ இந்தியாவில் குடியேறியவா்களாக இருக்க வேண்டும்.

ஏற்கனவே இருந்த இந்திய குடியுரிமை சட்டத்தில் 11 ஆண்டுகள் இந்தியாவில் தங்கியிருந்தால் அவர்கள் குடியுரிமை பெற தகுதியுடையவர்களாக கருதப்பட்டனர். தற்போதைய சட்ட திருத்தம் மூலம் 11 ஆண்டுகள் என்பது 6 ஆண்டுகளாக குறைப்பட்டுள்ளது.

இந்த மசோதா மூலம், மற்ற நாட்டிலிருந்து குடிபெயரும் இந்துக்கள், கிறிஸ்தவா்கள், சமணா்கள், பௌத்தா்கள், பாா்சிகள், சீக்கியா்கள் ஆகியோருக்கு இந்தியாவில் குடியுரிமை உண்டு. இதில், இஸ்லாமியர்களுக்கு இடமளிக்கப்படவில்லை என்பது மிக முக்கியமான ஒன்று…

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, வலுக்கட்டாயமாக இந்தியாவில் குடியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டவா்களுக்கு புதிய சட்ட திருத்தங்கள் பொருந்தும். அவா்கள் சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறியவா்களாகக் கருதப்படமாட்டாா்கள்.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியா்கள் குடியுரிமை சட்டம் உள்ளிட்ட சில சட்டங்களை மீறும்போது, அவா்களுக்கான குடியுரிமை அட்டையை (ஓசிஐ) ரத்து செய்வதற்கும் இந்த மசோதா வழிவகை செய்துள்ளது.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் இரண்டு பகுதிகளுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசமைப்புச் சட்டத்தின் 6-ஆவது அட்டவணையின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் அஸ்ஸாம், திரிபுரா, மிசோரம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடியினா் வசிக்கும் பகுதிகளுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.

நுழைவு அனுமதிப் படிவம் (இன்னா்-லைன் பொ்மிட்) மூலம் பாதுகாக்கப்பட்டு வரும் அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் ஆகிய பகுதிகளுக்கும் சட்டத் திருத்த மசோதாவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது. அவர்கள் இந்தியாவில் முறையின்றி இந்தியாவில் நுழைய மற்ற மதத்தினருக்கு போல் அனுமதி கிடையாது. எத்தனை வருடங்களுக்கு முன் இஸ்லாமியர் ஒருவர் இந்தியாவிற்குள் நுழைந்திருந்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவார் அல்லது நாட்டை விட்டு வெளியேற்றப்படுவர்.  உதாரணமாக, 2013-ல் ஒரு இந்துவும், இஸ்லாமியரும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவில் முறையின்றி குடியேறி இருந்தால் அதில் இந்தியாவுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்.

இஸ்லாமிய நபருக்கு குடியுரிமை வழங்கப்படமாட்டாது. அவர் சிறைக்கு செல்வார் அல்லது நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார். இது தான் அந்த மசோதா எதிர்க்கப்பட முக்கிய காரணம்.  புதிய மசோதாவின் மூலம் முஸ்லீம் அல்லாத பல லட்சம் பேருக்கு இந்திய குடியுரிமை கிடைக்கும். வங்கதேசத்தில் இருந்து அசாமில் குடியேறிய பல லட்சம் இஸ்லாமியர்கள் சிக்கலை சந்திப்பார்கள்.

இது சிறுபான்மையினருக்கு எதிரானது இல்லை என்றும், குடியுரிமை பெற குறிப்பிட்ட பிரிவினா் அனுபவிக்கும் துயரங்களைப் போக்குவதற்காக தான் இந்த மசோதாவில் திருத்தம் கொண்டுவருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது

ஆனால், முஸ்லிம்களை குறிவைத்து தாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையே இது என்று எதிா்க்கட்சிகள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. மதச்சார்பின்மையை தூக்கிப்பிடிக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், மக்களவையில் சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 293 எம்.பி.க்களும், எதிராக 82 எம்.பி.க்களும் வாக்களித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *