ரஜினிகாந்தை நாங்க பாஜகவுக்கு அழைக்கவில்லை – முரளிதரராவ்
நடிகர் ரஜினிகாந்தை நாங்கள் அழைக்கவேயில்லை இல்லை என்றும், அதற்குள் பாஜக அழைப்பை ரஜினி நிராகரித்துவிட்டார் என வதந்திகள் பரப்பப்படுவதாகவும் அக்கட்சியின் தேசியச் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.
டெல்லி, செப்-14
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து தலைவர் பதவி காலியாக உள்ளது.
அடுத்த தமிழக பாஜக தலைவர் பதவிக்கு யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் அடுத்த தலைவருக்கான போட்டியில் எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், கே.டி.ராகவன், வானதி சீனிவாசன், பொன். ராதாகிருஷ்ணன், கருப்பு முருகானந்தம் ஆகியோரின் பெயர்களை கூறிவருகின்றனர். தமிழக பாஜக நிர்வாகிகள் மத்தியில் கடும் போட்டி உள்ள சூழலில், நடிகர் ரஜினிகாந்த் அந்த பதவிக்கு வரக்கூடும் என தகவல்கள் உலா வந்தன.
இந்த நிலையில் டெல்லியில் பாஜக கட்சியின் தலைமை அலுவலகத்தில் பா.ஜனதாவின் தேசிய பொதுச்செயலாரும், தமிழக பொறுப்பாளருமான முரளிதரராவ் செய்தியாளர்களிடம் பேசியபோது, நடிகர் ரஜினிகாந்தை பாஜகவிற்கு வருமாறு தாங்கள் அழைக்கவில்லை என்றும், உண்மை அப்படியிருக்க பாஜக அழைப்பை அவர் ஏற்கவில்லை எனக் கூறுவது தவறு எனவும் தெரிவித்தார். மேலும், தமிழக பாஜகவுக்கு தலைவரை நியமிப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், அடுத்த 15 நாட்களுக்குள் கூட புதிய தலைவர் நியமிக்கப்படுவார் எனவும் கூறினார். நிச்சயமாக சாதி அடிப்படையில் பாஜகவின் தலைவர் தேர்வு இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.