மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்-இடைத்தேர்தல் குறித்து காங். கருத்து

பெங்களூரு, டிசம்பர்-09

காங்கிரசில் இருந்து பாஜகவுக்கு தாவி வேட்பாளர்களாக நின்றவர்களை மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டனர். எங்கள் தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம் என கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சிவக்குமார் கூறியுள்ளார்.

கர்நாடகாவில் காலியாகவுள்ள சிவாஜிநகர், கே.ஆர்.புரம் உள்ளிட்ட‌ 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், மஜத ஆகிய மூன்று கட்சிக்களுக்கிடையே கடும் போட்டி நிலவியது. 15 தொகுதிகளிலும் 66.49 சதவீத வாக்குகள் பதிவாகின.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டு வருகின்றன. பாஜக 12 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மதச்சார்பற்ற ஜனதாதளம் எந்த தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை. ஒரு தொகுதியில் சுயேச்சை முன்னிலை வகித்து வருகிறார்.

இதுகுறித்து கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சிவக்குமார் இதுகுறித்து கூறியதாவது: ‘‘கர்நாடக மக்கள் அளித்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம். எங்கள் கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவி வேட்பாளர்களாக நின்றவர்களை மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டனர். ஜனநாயகத்தில் மக்கள் அளிக்கும் தீர்ப்பே இறுதியானது. எனவே எங்கள் தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம். எனினும் இடைத் தேர்தல் முடிவால் எங்களுக்கு சோகம் எதுவமில்லை.’’ எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *