சென்னையில் 2,500 பேனர்கள் அகற்றம்: மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சென்னையில் இன்று மட்டும் 2,500-க்கும் மேற்பட்ட பேனர்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி உள்ளனர்.

சென்னை, செப்-14

சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ (23 வயது) கடந்த 12ஆம் தேதி பள்ளிக்கரணை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ, பைக்கில் வலதுப்புறம் திரும்ப முயன்ற போது, அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் விழுந்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது சுபஸ்ரீ மீது பின்னால் வந்த லாரி ஏறியது. இதனால் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ பலியானார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, முதலில் லாரி ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளார்கள். பின்னர், அந்த விசாரணையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் தனது இல்லத்திருமணத்துக்காக, அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இளம்பெண் சுபஸ்ரீயின் மரணத்துக்கு காரணமான பேனர் அடித்த அச்சகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இளம்பெண் உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ பலியானது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்து நேற்று விசாரணை நடத்தியது. அப்போது பேனர் கலாசாரத்தை அரசும், அதிகாரிகளும் ஊக்குவிப்பதாக நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பேனர் விவகாரத்தில் ஏராளமான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தும் அவை கடைப்பிடிக்கப்படவில்லை என்றும் கண்டனம் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டும் என்றும் இது தொடர்பாக முழு தகவல்களையும் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வருகிற 25-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து நேற்று முதல் சென்னையில் சட்ட விரோதமாக மற்றும் முறையான அனுமதி பெறாத பேனர்கள் அதிரடியாக அகற்றப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ், 15 மண்டல அதிகாரிகளிடமும் பேனர்களை அகற்றும்படி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டி ருந்த பேனர்களை அகற்றினார்கள். பொதுமக்களுக்கு இடையூறாக கட்டப்பட்டு இருந்த கட்சி கொடிகளும் அகற்றப்பட்டன. இன்றும் 2-வது நாளாக பேனர்களை அகற்றும் பணி நடந்தது.

இன்று மதியம் வரை சென்னையில் 2,500-க்கும் மேற்பட்ட பேனர்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி உள்ளனர். பேனர்களை அகற்றும் போது அரசியல் கட்சியினர் யாராவது குறுக்கீடு செய்தால் அதுபற்றி போலீசில் தெரிவிக்கும்படி மாநகராட்சி ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *