27 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் : டிச. 27,30ல் வாக்குப்பதிவு, டிச.9ல் வேட்பு மனு தாக்கல்

 

சென்னை.டிசம்பர்.7

தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர ஏனைய 27 மாவட்டங்களில்  டிசம்பர் 27 , 30 தேதிகளில் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தது.

இதனை எதிர்த்து உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி திமுக தாக்கல் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த  உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் விழுப்புரம்,கள்ளக்குறிச்சி,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என தீர்ப்பு அளித்தது.

 இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு பேசினார்.

  உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 , 30 தேதிகளில்  வாக்குப்பதிவு நடைபெறும்.

கிராம  ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்,   ஒன்றிய ஊராட்சிக் குழு உறுப்பினர், மாவட்ட  ஊராட்சிக்குழு உறுப்பினர் உள்ளிட்ட 91,975 பதவிகளுக்கு இரண்டு கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.  

27ந் தேதி நடைபெறும் முதற்கட்டத் தேர்தலில் 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள்,2546  ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள்,4,700 கிராம ஊராட்சித் தலைவர் 37,830  ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும்.

30ந் தேதி நடைபெறும் இரண்டாம் கட்டத் தேர்தலில், 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள்,2544  ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள்,4,924 கிராம ஊராட்சித் 38,916  ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும்.

இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் 9 ந் தேதி தொடங்குகிறது, வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாள் டிசம்பர் 16 ஆகும். மனுக்கள் மீதான பரிசீலனை டிசம்பர்17 ந் தேதி நடைபெறும், மனுக்களை திரும்பப்பெற டிசம்பர் 19  கடைசி நாளாகும்.

தேர்தல்  நாட்களில் காலை 7 மணி  தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.   தேர்தலுக்கு நான்கு  வண்ணத்திலான வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ந் தேதி நடைபெறும் அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்பு ஜனவரி 6ந் தேதி நடைபெறும்

மாவட்ட ஊராட்சிக் குழுத்  தலைவர்,ஒன்றிய குழுத் தலைவர், ஊராட்சித் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11 அன்று நடைபெறும் என தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *