திருவண்ணாமலை தீபத் திருவிழா மகா தேரோட்டம்: திரளான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை. டிசம்பர்.7

திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில்  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக கருதப்படும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 10 நாட்கள் நடைபெறும் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் இரவு நேரங்களில் சுவாமிகள் திருவீதி உலா நடைபெற்றது.  விழாவின் 6 ம் நாள் இரவு பஞ்ச மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், அருணாசலேஸ்வரர், உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் வெள்ளி தேர், வெள்ளி இந்திர விமானம், வெள்ளி விமானங்களில் கோவில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் இன்று நடைபெற்றது. முதலில் விநாயகர் தேர் இழுக்கப்பட்டது. தேரோட்டத்தை மாவட்ட ஆட்சியிர் கந்தசாமி, கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். அதைத் தொடர்ந்து முருகர் தேரும் வீதி உலா வந்தன. 2 தேர்களும் நிலைக்கு வந்த பின்னர் பெரிய தோராட்டம் தொடங்கியது. மதியம் 2 மணிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 63 அடி உயர மகா தேரில் உண்ணா முலையம்மன்  சமேத அண்ணாமலையார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பெரிய தேரோட்டத்தை  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமசந்திரன் வடம்பிடித்து தொடங்கி வைத்தார். இதில் ஆண்கள் இடது பக்கமும், பெண்கள் வலது பக்கமும், இரும்பு சங்கிலி வடத்தை பிடித்து, தேரை இழுத்துச் சென்றனர் பக்தர்களின் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தி முழக்கத்துடன் மக்கள் வெள்ளத்தில் தேர் அசைந்து சென்றது.

இதைத் தொடர்ந்து அம்மன் தேரை பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்து சென்றனர். இதை தொடர்ந்து சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெற்றது.  இதனைத் தொடர்ந்து 10 ந் தேதி காலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது. தீபத் திருவிழாவை காணவரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், மற்றும் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *