இது இந்தியா.‘இந்தி’யா அல்ல – மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

இந்தியாவின் அடையாளம் இந்தி மொழி என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறியிருப்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது இந்தியா.‘இந்தி’யா அல்ல என எச்சரிக்கும் அதேவேளையில் பிரதமர் மோடி அவர்கள் இதுகுறித்த தன்னுடைய நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை, செப்-14

இந்தி தினத்தை முன்னிட்டு ஒரே நாடு ஒரே மொழி என்ற அடிப்படையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,
இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்றும், நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருந்தால் உலக அரங்கில் இந்தியாவில் அடையாளப்படுத்த முடியும் என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” இந்தியாவின் ஒருமைபாட்டுக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் நாட்டின் உள்துறை அமைச்சரே கூறியிருப்பது வேதனை அளிக்கிறது. அமித்ஷா தனது கருத்தை மறுபரிசீலனை செய்வது நாட்டின் ஒற்றுமைக்கு உகந்ததாக இருக்கும். தமது கருத்தை அமித்ஷா திரும்ப பெற வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.

மேலும், இந்தியாவா? இந்தி-யாவா? என்று உள்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடையாளத்தை சிதைக்கும் நடவடிக்கையாக பாஜக அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டிய ஸ்டாலின், இந்தி பேசாத மக்களை 2-ம் தர குடிமக்களாக்கும் முயற்சியாகவே இந்த நடவடிக்கை தெரிகிறது என்று தெரிவித்தார். குடிமை, ரயில்வே, அஞ்சல் ஒவ்வொன்றிலும் இந்தியை திணிக்க பாஜக அரசு முயற்சி செய்து வருவதாகவும், தமிழையையும் காத்து, பிறமொழிகளுக்கும் திமுக அரணாக விளங்குகிறது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அமித்ஷா தனது கருத்தை திரும்ப பெறாவிட்டால் இன்னொரு மொழிப்போருக்கு திமுக ஆயத்தமாகும். இது தொடர்பாக மற்ற மாநிலங்களையும் இணைத்து ஜனநாயக போர்க்களத்தை சந்திக்க திமுக தயங்காது. நாட்டின் ஒருமைபாட்டை காக்க திமுக தயாராக இருக்கிறது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *