ஹைதராபாத் என்கவுன்டர் குறித்து பிரபலங்களின் கருத்து

டிசம்பர்.6

ஹைதராபாத் பெண் மருத்துவரை  பாலியல் பலாத்காரம் செய்து எரித்த கொலை குற்றவாளிகளை என்கவுன்டர் செய்த சம்பவம் தொடர்பாக பிரபல பெண் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்..

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் செல்வி மாயாவதி கூறுகையில், டெல்லி,உத்தரபிரதேச அரசுகள் தெலுங்கானா காவல்துறையிடம் இருந்து பாடம் கற்க வேண்டும்   இந்த நடவடிக்கை சரியானது  என்று கூறியுள்ளார்.

திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி,  4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதால், பலருக்கு மகிழ்ச்சி தரும் வேளையில், நியாயம் கிடைக்கும் உணர்வை தருகிறது. அதேவேளையில், என்கவுன்டர்தான் இதற்கு தீர்வா என்றும் கேள்வி எழுகிறது என கூறியுள்ளார்.

இந்திய மார்க்சிஸ்டு கட்சியின் பாலபாரதி,இந்த என்கவுன்டர், சாதாரண மக்களுக்கு நியாயம் போல தோன்றும்,ஆனால், முறையாக  விசாரித்து, நீதிமன்றத்தின் மூலம் கடுமையான சட்ட ரீதியான தண்டனைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும். நாடு முழுக்க பலாத்காரங்களுக்கு எதிராக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட வேண்டும். எனவே, என்கவுன்டர் எதற்கும் தீர்வு கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் விஜயதாரணி, பெண்களுக்கு ஆதரவாக இறைவனே வழங்கிய தீர்ப்பாக கருதுகிறேன், சரியான நடவடிக்கைக்கு ஹைதராபாத் காவல்துறைக்கு எனது பாராட்டுகள் என தெரிவித்துள்ளார்

 தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்,  என்கவுன்டரில் 4 குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டது வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார்.

நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன்,

என்கவுன்டர் என்பது கொண்டாடப்பட வேண்டிய விஷயம் கிடையாது. ஆனால் இப்படி ஒரு நிலையை கொண்டு வந்தது இந்த சமூகம்தான் என்பதற்காக நாம் வெட்கப்படவேண்டும், வேதனைப் படவேண்டும். என்கவுன்டர் என்பது சட்டப்படி தவறு என்றாலும் ஒரு தாயாக, ஒரு பெண்ணாக, பெண் குழந்தைகள் வைத்திருப்பவராக நான் இதை பார்க்கும் போது உடனடியாக நீதி என்பது இந்த விஷயத்திலாவது கிடைத்ததே என்ற திருப்தி ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *