நித்தியானந்தாவை கண்டுபிடிப்பதில் சிக்கல்-வெளியுறவுத்துறை

டெல்லி, டிசம்பர்-06

நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்பதை கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளது எனவும், அவரின் புதிய பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நித்தியானந்தா வெளிநாட்டு தப்பிச் சென்று விட்டதாக முதலில் கூறப்பட்டது. பிறகு அவர் இமயமலை சாரலில் பதுங்கி இருப்பதாகவும், பின்னர் அவர் தனியாக தீவு ஒன்றை வாங்கி, அங்கு கைலாஷ் என்ற புதிய நாட்டை உருவாக்கியதாகவும் கூறப்பட்டது. ஆனால் நித்தியானந்தா எங்கே இருக்கிறார் இதுவரை உறுதியான தகவல் கிடைக்கவில்லை.

இந்நிலையில் டில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் ராவேஷ் குமார் கூறுகையில், நித்தியானந்தாவின் பாஸ்போர்ட்டை ஏற்கனவே ரத்து செய்து விட்டோம். அவரின் புதிய பாஸ்போர்ட் விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டு விட்டது. பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வரும் அவரை எங்களின் அனைத்து தூதரகங்களின் மூலம் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அவர் எங்கே இருக்கிறார்கள் என்பதை கண்டறிவது சிரமமாக உள்ளது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியா – ஜப்பான் மாநாடு டிச.15 முதல் 17 வரை நடக்கும். நைஜீரிய கடல்பகுதியில் கடத்தப்பட்ட இந்தியர்கள் 18 பேரை மீட்பது தொடர்பாக நைஜீரிய நாட்டு அதிகாரிகளுடன் பேசப்பட்டு வருகிறது. சூடான் தீவிபத்தில் உயிரிழந்த 6 இந்தியர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முயறக்சித்து வருகிறோம். உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *