என்கவுன்டர் ஏன்?- காவல் ஆணையர் சஜ்ஜனார் விளக்கம்

ஹைதராபாத, டிசம்பர்-06

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைதான நான்கு பேரும் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கியை பறித்து சுட முயன்றபோது, நால்வரையும் என்கவுன்டர் செய்ததாக தெலங்கானா காவல்துறை கூறியிருக்கிறது. 

கடந்த மாதம் 27ஆம் தேதி ஹைதராபாத் அருகே சைபராபாத் டோல்கேட்டில் 26 வயதான பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் லாரி ஓட்டுனர்கள், உதவியாளர்கள் உள்பட நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். பின்னர், அவரது உடல் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து முகமது ஆரிஃப், சிவா, சென்ன கேசவலு, நவீன் ஆகிய நான்கு பேரையும் சம்பவம் நிகழ்ந்த 48 மணி நேரத்தில் தெலங்கானா போலீசார் கைது செய்தனர்.

இந்த குற்ற வழக்கை விசாரிக்க தெலுங்கானா அரசு விரைவு நீதிமன்றம் அமைத்தது. குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க பல்வேறு மகளிர் அமைப்பினரும், மாணவர்களும், அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தினர்.

இந்த சூழலில், பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை வேளையில், குற்றம் நடைபெற்றதாக கூறப்படும் இடத்தில் வைத்து விசாரணை நடத்த, நான்கு பேரையும் கைவிலங்கு பூட்டாமல், போலீசார் அழைத்துச் சென்றனர்.

அப்போது, குற்றவாளிகள் 4 பேரும் தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நான்கு பேரையும், தெலங்கானா போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.

இந்நிலையில், பிற்பகல் 3.15 மணியளவில், சைபராபாத் காவல்துறை ஆணையர் சஜ்ஜனார், செய்தியாளர்களை சந்தித்து, என்கவுன்டர் குறித்து விளக்கமளித்தார். பெண் மருத்துவர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வரையும், நீதிமன்ற அனுமதியோடு, 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தோம்.

முதல் 2 நாட்களிலேயே தாங்கள் தான் குற்றமிழைத்தவர்கள் என்பதை நான்கு பேரும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்து ஒப்புக் கொண்டுள்ளனர். பெண் மருத்துவரிடம் இருந்து, என்னென்ன பொருட்களை எடுத்தீர்கள், குறிப்பாக அவரது செல்போன் எங்கே என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அந்த பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற இடத்தில் அருகில், மறைவான பகுதியில், செல்போனை பதுக்கி வைத்திருப்பதாக நால்வரும் தெரிவித்தனர்.  இதையடுத்தே, சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு, நால்வரையும் அழைத்துச் சென்றோம். அப்போது, நால்வரும், ஆளுக்கொரு இடத்தைக் கூறி, போக்கு காட்டினர். திடீரென அவர்கள் நான்குபேரும் போலீசார் மீது கற்களை வீசித்தொடங்கினர்.  

அப்போது, நால்வரில் இரண்டு பேர், போலீசார் வைத்திருந்த துப்பாக்கியை பறித்து, அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். அப்போது, வேறு வழியே இன்றி, தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில், நால்வரும் என்கவுன்டர் செய்யப்பட்டனர். இரண்டு போலீசாருக்கு தலை உள்ளிட்ட பகுதியில் தீவிர காயம் ஏற்பட்டுள்ளது. துப்பாக்கி குண்டு காயம் இல்லை.

இந்த களேபரங்கள், அதிகாலை 5.30 மணிக்குத் தொடங்கி, காலை 6.15 மணிக்குள், நடந்து முடிந்துவிட்டதாகவும், சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் தெரிவித்தார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *