சென்னையில் ஆக்கிரமிப்புகள் முழுவதும் அகற்றப்படும்-ஆணையர் பிரகாஷ்

சென்னை, டிசம்பர்-06

நடப்பு நிதியாண்டிற்குள்ளாக ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும் எனவும், சென்னையில் மியாவாக்கி மரம் வளர்க்கும் திட்டமும் வரும் மார்ச் மாதத்திற்குள்ளாக நடைமுறைக்கு வரும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

மாணவர்களின் எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் வகையில் மாதம் ஒரு முறை அரசு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் சென்னை மாநகராட்சி ஆணையருடன் கலந்துரையாடலில் பங்கேற்கும் நிகழ்வு ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது. அதன்படி, காஃபி வித் கமிஷ்னர் என்ற நிகழ்வு இன்று சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இதில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கலந்து கொண்டு அரசு பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் பிரகாஷ், அரசு பள்ளிகளின் தரத்தினை உயர்த்த, மாணவர்களின் சேர்க்கையை உயர்த்த பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. மேலும், பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தொழில்நுட்பம் சார்ந்த, திறன் மேம்பாடு போன்ற செயல்கள் குறித்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சென்னையில் உள்ள ஆக்கிரமிப்புகள் நடப்பு நிதியாண்டிற்குள்ளாக முழுவதுமாக மீட்கப்படும். குறிப்பாக நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் மரங்கள் வளர்ப்பதை ஊக்குவிக்க மியாவாக்கி காடுகள் போன்று, சிறிய இடத்தில் அதிகப்படியான மரங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக 30 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள்ளாக இதன் பணிகள் துவங்கப்படும். இதனடிப்படையில் சென்னையில் உள்ள பெரு நிறுவனங்கள் தங்களது வளாகத்தில் மரங்கள் நடவேண்டும்.

சென்னையில் மணலில் ஊழல் நடைபெறவில்ல.  மழைக்காலத்திற்காக போடப்பட்ட சாலை அமைப்பதற்கும், பல்வேறு கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் தரமானதாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் ஊழல் முறைகேடு நடந்திருந்தால் சென்னையில் மழை பெய்த பொழுது வெள்ளம் போன்ற பாதிப்புகளில் சிக்கியிருக்கும் எனவே ஊழல் என்பது தவறான குற்றச்சாட்டு என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *