ஒரே மொழியாக இந்தி வேண்டும் – அமித்ஷா சர்ச்சை கருத்து
நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லி, செப்-14
இந்தி தினத்தையொட்டி ஒரே நாடு, ஒரே மொழி என்ற கொள்கையின் அடிப்படையில் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு, ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு, ஆனால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே மொழி இருப்பது இந்தியாவுக்கான அடையாளமாக இருக்கும், இது உலகளவில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும். இன்றைய தேதிக்கு, இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது பலராலும் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும்.
நாட்டில் அவரவர் தாய்மொழியையே பேசும் அதே நேரத்தில் இந்தியை அனைவரும் பயில வேண்டும். நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும்.இந்தி ஒரே மொழியாக இருந்தால் உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும்.” என்று பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே இந்தியாவை ஆளும் பாஜக அரசு இந்தியை மற்ற மொழி பேசும் மாநிலங்களில் திணித்து வருகிறது என்று பலரும் குற்றச்சாட்டு வைக்கும் நிலையில் அமித்ஷா இந்தி தினத்தையொட்டி இவ்வாறு ட்வீட் செய்துள்ளார். இவரின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.