உள்ளாட்சி மறைமுக தேர்தலுக்கு எதிரான வழக்கு: டிச.19-க்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற கிளை ஆணை

மதுரை.டிசம்பர்.5

மாநகர மேயர், நகர்மன்றத் தலைவர், பேரூராட்சித் தலைவர் ஆகிய  பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கு எதிரான வழக்கின் விசாரணையை 19-ந்தேதிக்கு ஒத்திவைத்து சென்னை  உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் முகமது ரஸ்வி எனப்வர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகள் 276 நகராட்சிகள் , 561 பேரூராட்சிகளுக்கு மேயர் மற்றும் மாநகராட்சி, நகராட்சித் தலைவர்கள் நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.

இப்போது இப்பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மறைமுகத் தேர்தல் என்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது.

அரசு சுயலாப நோக்கத்துடன் மறைமுகத் தேர்தலை அமல்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க முன்பு பேரவையில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெற்றெடுக்க வேண்டும்.

சட்ட வல்லுனர்களிடம் கருத்து கேட்டிருக்க வேண்டும். எதையும் செய்யாமல் தமிழக அரசு உள் நோக்கத்துடன் அவசரச் சட்டத்தை பிறப்பித்துள்ளது.  இந்தத் தேர்தல் முறையில் பெரியளவில் பண பேரம் நடைபெற வழி வகுக்கும் .

பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி மக்கள் பிரதிநிதிகள், மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படும் போது இணக்கமான சூழல் ஏற்படும்.

எனவே மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்தை செல்லாது என அறிவித்து அதனை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி துரைசாமி, நீதிபதி ரவீந்திரன்  ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் அரசு தரப்பிடம் சில தகவல்களை உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையேற்றுக் கொண்ட நீதிபதிகள் விசாரணையை வரும்19 ந் தேதிக்கு  ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *