உள்ளாட்சித் தேர்தல் வழக்கு: 9 மாவட்டங்களை தவிர்த்து தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி

டெல்லி.டிசம்பர்.5

தமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், திமுக மனு மீதான விசாரணையை  தேதி குறிப்பிடமால் ஒத்திவைத்துள்ளது. 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. வேட்புமனு டிசம்பர் 6-ம் தேதி தொடங்க உள்ளது.

இதனையடுத்து உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன் வார்டு மறு வரையறை, இட ஒதுக்கீடு, சுழற்சிமுறை உள்ளிட்ட பணிகள் நிறைவடையாததால் அறிவிக்கப்பட்ட கிராம ஊரக உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. உள்ளாட்சி தேர்தல் நடந்து நிர்வாகிகள் வரவேண்டும் என்பதே எங்கள் விருப்பம், ஆனால் நியாயமான முறையில் நடைபெறவேண்டும்,மறுவரை செய்யாமல் தேர்தல் நடத்த கூடாது என திமுக தரப்பில் வாதிடப்பட்டது.  இதற்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், 2011 ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி மறுவரையறை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு  , தொகுதி மறுவரையறை செய்யவில்லை என நினைத்தால் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளி வைக்கலாம் என்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டால் தேர்தலை ரத்து செய்ய முடியாது என வாதிட்டது.

 பிரிக்கப்பட்ட புதிய மாவட்டங்களில் மறுவரையறை பணிகள் முடியாத நிலையில் உள்ளாட்சி தேர்தலில் குழப்பம் வராதா என    நீதிபதிகள் கேட்டனர். மேலும் தேர்தலை நீதிமன்றத்தால் ரத்து செய்ய முடியாது ஆனால் முறையான விதிகள் பின்பற்றவில்லை எனில் தள்ளி வைக்க முடியும் என்று கூறி, இந்த வழக்கு தொடர்பாக மதியம் 2 மணிக்குள் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும். என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மனுவில், 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க தயாராக உள்ளோம். மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்த தயாராக உள்ளோம் என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்த அனுமதி அளித்த நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல்  விசாரணையை ஒத்தி வைத்தனர்.

 இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக வழக்குரைஞர், 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக உள்ளாட்சி தேர்தல் நடத்த திமுக கோரியுள்ளதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *